முன்னணி-கூட்டமைப்பு கூட்டு:கவிழ்ந்தது காரைநகர்!

 கூட்டமைப்பபுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு சேர்ந்ததையடுத்து காரைநகர் பிரதேசசபை ஆட்சி கவிழ்ந்துள்ளது.

இதனிடையே கட்சியின்  தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் சூநடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி அவர்களும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருதட உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகின்றார்கள் என ஊடகப்பேச்சாளர் சுகாஸ் வட்சப் மூலம் அறிவித்துள்ளார்.

இதனிடையே காரைநகர் பிரதேச சபையின் இன்றைய அமர்வு தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேச்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

அதன் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொற்கடிக்கப்பட்டுள்ளதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.

இதனால்  புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதய தவிசாளர் உயிரிழந்ததால் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுயேச்சைக் குழு  வசமானது.

பின்னர் புதிய தவிசாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது  தோற்கடிக்கப்பட்டிருந்தது. இதனால்  திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments