தரகரிற்கு தலையிடி!இலங்கை படைகளின் புதிய காணி தரகராக வடக்கு ஆளுநர் மாறியுள்ள நிலையில் இன்று அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் எச்சரித்ததையடுத்து  அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து  கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே  போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.


போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும்,  இராணுவத்தினரும்,  புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதனிடையே வடமாகாணத்தின், அபிவிருத்தி, பொருளாதார, சமூக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக அரச அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


எனினும், அண்மைய நாட்களில் மாதகல் போன்ற இடங்களில் அரச அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்துள்ளனர்.


காணி அளவீடுகளை மேற்கொள்வதில் அவர்களுக்கு கரிசனைகள் காணப்படுமாயின் அதுபற்றி கலந்துரையாடல்களைச் செய்வதற்கு நான் எப்போதுமே தயாராகவே உள்ளேன்.


அவ்வாறிருக்கையில், அரச அதிகரிகளின் செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதானது பொருத்தமற்ற செயற்பாடாகும்.


இவ்விதமான நிலைமைகள் தொடருமாக இருந்தால் வடமாகாணத்தின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.


இதனிடையே இன்றைய தினம் காணி உரிமையாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்த ஆளுநர் பின்னர் அதனை இரத்து செய்து திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments