மணிக்கு ஆதரவளிக்க கோருகிறார் சி.வி!

 


கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ். மாநகர சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை ஒன்றின் ஊடாகவே கோரிக்கை விடுத்துள்ளார். 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வரவு செலவுத் திட்டத்தைதோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனைவெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை நான்அறிவேன்.  

மக்கட் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்புவெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால் தான் இவ்வாறானசிந்தனைகள் மேலோங்குகின்றன. 

 யாழ் மக்களின் நலன் பற்றியோ,வருங்காலம் பற்றி யோசித்து சிந்திக்காது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

 மணிவண்ணன் எங்கள் கட்சி உறுப்பினர் அல்ல. ஆனால் அவர் மக்கட் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் மக்கள் சிந்தனையை தகுந்த விதத்தில் உள் நாட்டவர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் கொண்டுசெல்லக் கூடியவர். 

 அவரின் திறனும் அறிவும் ஆற்றலும் ஆளுமையும் மற்றைய உறுப்பினர்கள் எத்தனைபேரிடம் இருக்கின்றது என்பதை உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

 வெறும் கட்சிசார்பானமுரண்பாடுகளால் ஒரு தகுதி வாய்ந்த நகர பிதாவை இழக்க நாங்கள் இடம் அளிக்கக்கூடாது. 

 இந்தக்காலகட்டம் நெருக்கடிமிக்கது. அறிவு,ஆளுமை,அதிகாரம் கொண்டவர்களை நாங்கள் பதவி இழக்கச் செய்தோமானால்  அரசாங்கத்தின் கரவானநடவடிக்கைகளைக் கண்டிக்கமுடியாமல் போய்விடும். 

 எனக்கு மணிவண்ணனைத் தனிப்பட்ட முறையில் அதிகம் தெரியாது. ஆனால் அவரின் செயல்கள் பேச்சுக்கள் அவரை எனக்கு அடையாளப்படுத்தியுள்ளன.

 தயவு செய்து பதவியில் இருக்கும் நகர பிதாவை கட்சிக் காரணங்களுக்காக வெளியேற்றாதீர்கள் என்று சகல யாழ் மாநகர சபை உறுப்பினர்களிடமும் அன்பான கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றேன் என மேலும் குறிப்பிடப்படுள்ளது.

No comments