இந்தியா பதின்மூன்றுடன் அலைய சீனா வேட்டியுடன் கால் பதிக்கிறது! பனங்காட்டான்


அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பதின்மூன்றைக் காவிக்கொண்டு இந்தியா வட்டமிட, அதை நம்பியவாறு அவர்கள் பின்னால் அறுந்த கயிற்றில் தொங்கியவாறு கூட்டமைப்பு கூடிக்கூடி பிளவுண்டு கலைய, தெற்கில் ஆழமாகப் பாதம் பதித்துள்ள சீனா வேட்டி கட்டியவாறு வடக்கில் முதலடி வைத்துள்ளது. 

இலங்கைத் தமிழரின் அரசியல் பயணம் கால்நடை யாத்திரை போன்று அங்குமிங்கும் இழுபட்டவாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. 

உள்நாட்டுத் தீர்வா, சர்வதேச மத்தியஸ்த தீர்வா என்றுகூட நிச்சயமற்ற நிலையில் உலகநாடுகளின் தலையீடு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காணப்படுகிறது. 

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்றும் இதில் முன்னணி வகிக்கின்றன. அடுத்த மாதம் (ஜனவரி) அமெரிக்கா மீண்டும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இணையவிருப்பதால், வரப்போகின்ற மார்ச் மற்றும் செப்டம்பர் மாத அமர்வுகள் முக்கியத்துவம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், இந்தியாவும் சீனாவும் தமிழரை தங்கள் பக்கம் இழுக்கும் நகர்வுகளை வீச்சாக மேற்கொள்கின்றன. இந்தியாவுக்கான இதற்குரிய ஆயுதம் 13ம் திருத்தமும் அதனூடான மாகாண சபையும். சீனா மறுதிசையில் யாழ்ப்பாணத்தின் பொருளாதார அபிவிருத்தியில் தன்னை நேரடியாக ஈடுபடுத்த களத்தில் இறங்கியுள்ளது. 

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹெங் தமது குழுவினர் சகிதம் வடபகுதிக்கு இவ்வாரம் மேற்கொண்ட விஜயம் இவ்விடயத்தில் கவனம் பெற்றுள்ளது. வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் ராணுவ - பொலிஸ் பாதுகாப்புக்கு நிகராக இவருக்கு வழங்கப்பட்டதனூடாக இவரது வகிபாகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. 

இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுடன் அமெரி;க்காவுக்கும் சீனாவுக்கும் நீண்டகாலத் தொடர்புண்டு. அமெரிக்கன் மாவும், சீனப் பச்சைஅரிசியுமே இலங்கை மக்களுக்கு கூப்பனூடாக வழங்கப்பட்டதை மறந்துவிட முடியாது. அமெரிக்கன் மா இல்லையென்றால் பாண் தயாரிக்கும் பேக்கரிகள் மூடப்பட்டிருக்கும். 

1950களில் இலங்கை-சீன நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பண்டமாற்று அடிப்படையில் இலங்கை றப்பரைப் பெற்றுக் கொண்டு வெள்ளைப் பச்சை அரிசியை சீனா இலங்கைக்குக் கொடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இருநாட்டு உறவும் றப்பர் போல ஒட்டப்பட்டு இழுபடுகிறது. 

கடந்த இருபது ஆண்டுகளுக்குள் சீனா மெதுமெதுவாக இலங்கையை தனக்கான தீவாக்கி விட்டது. இலங்கை சீனாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம். அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையம், கொழும்புத் துறைமுக கிழக்குக்கரை நகரம் என்பவை சீனாவின் பிராந்தியங்கள். 

இப்போது வடமாகாணமும் அவ்வாறாகிறது. இந்தியா துணைத்தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவி, திறக்கப்படாத கலாசார மண்டபத்தை யாழ்நகரின் மத்தியில் அமைத்து, இயங்காத விமானநிலையத்தை பலாலியில் புனரமைத்து, பாரதி சிலை, மகாத்மா காந்தி சிலை என்பவற்றுக்கு முன்னால் நினைவு நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருக்க, சீனா பொருளாதார அபிவிருத்தி என்ற பெயருடன் இங்கு காலை ஆழப் பதிக்கிறது. 

பருத்தித்துறையில் சீனாவின் நவீன துறைமுகம் வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. பூநகரிப் பகுதியில் சீனாவின் கடலட்டைப் பண்ணை. இவ்விரு பிரதேசங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சிறீதரனின் பகுதிகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டிலுள்ள மூன்று தீவுகளில் சீனா உருவாக்கும் அனல் மின்நிலையங்கள். சீனாவின் வடக்குடனான உறவு மேலும் அதிகரிக்குமென சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளையும், மீன்பிடி வலைகளையும் சீனத் தூதுவர் வழங்கியுள்ளார். இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட ஈழ மீனவர்களுக்கு சீனா கைகொடுப்பதைப் போன்று இது காட்டப்படுகிறது. 1987ல் இந்திய விமானங்கள் வடக்கின் வான்பரப்பில் பறந்து உணவுப் பொதிகளை வீசியதுதான் இதன்போது நினைவுக்கு வருகிறது. 

இந்திய ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கைகளின்போது பல்லாயிரம் தமிழர் அகதிகளாகத் தங்கியிருந்த நல்லூர்க் கோயிலையும் சீனத் தூதுவர் விடவில்லை. பட்டுக்கரை வேட்டியுடன் பாதணியின்றி கோயிலுக்குள் சென்று, வணங்கி பிரசாதம் பெற்றுள்ளது இவரது யாழ்ப்பாண விஜயத்தின் ஒரு சிறப்பம்சம். 

இவரது வடக்கு விஜயம் தொடர்பாக உச்சம் என்று சொல்லக்கூடிய இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரைக்குச் சென்று, ட்ரோனை பறக்கவிட்டவாறு இங்கிருந்தே இந்தியக் கரை எவ்வளவு தூரம் என்று கேட்ட சீனத்தூதுவர், மன்னாருக்குச் சென்ற பொழுது இலங்கைக் கடற்படையின் பாதுகாப்புடன் ராமர் பாலத்தைச் சென்று பார்வையிட்டதுடன், இது முடிவல்ல ஆரம்பம் என்று கூறியதும் இந்தியாவுக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்பட வேண்டியது. 

இந்தியா தன் பக்கத்துக்கு 13வது திருத்தத்துடன் அலைகிறது. இந்தத் திருத்தத்தை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தீர்மானத்தை சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூடிய சில தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக எடுத்தன. ரெலோவின் முன்னெடுப்பிலான இக்கூட்டத்தில் விக்னேஸ்வரனும், ராவுப் ஹக்கீமும், மனோ கணேசனும் பங்குபற்ற, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமை தாங்கியது நிகழ்கால அரசியல் அரங்கில் எதிர்பாராத திருப்பம். 

இந்திய அரசுக்கு அனுப்பவென இங்கு தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட சம்பந்தன் உடன்படவில்லை. தமிழரசுக் கட்சியை தாம் சேர்ந்தவரென்பதால் அக்கட்சியுடன் கூடிப் பேசாது ஆவணத்தில் ஒப்பமிட அவர் மறுத்துவிட்டார். தமிழரசின் அரசியல் குழு இந்த மாதம் 21ம் திகதி கொழும்பில் கூடும்பொழுது இதுபற்றி சாதகமாக அல்லது பாதகமாக ஒரு முடிவு எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரம் சம்பந்தன் தலைமையில் கட்சிகள் கூடி 13வது திருத்தத்தை இந்தியாவிடம் வலியுறுத்துவது என உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டமைப்பின் சுமந்திரன் தமது புதிய இணையர் சாணக்கியன் சகிதம் சுன்னாகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். 

கோதபாயவின் புதிய அரசியலமைப்பில்(?) 13க்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வை தாங்கள் கோரிக் கொண்டிருக்கும் வேளையில், இதுவென்ன இன்னமும் அவர்கள் 13 ஐக் கேட்கின்றனர் என்று சுமந்திரன் குறிப்பிட்டது கொழும்புக் கூட்டத்துக்கு ஓர் அடியாக அமைந்தது. 13ம் திருத்தமென்றும், மாகாண சபையென்றும் இதுவரை கூறி வந்த சுமந்திரனுக்கு திடீரென என்ன ஆனது? 

சுமந்திரனை ஓரங்கட்ட ரெலோ செல்வம் அடைக்கலநாதனும், இவரை ஓரங்கட்ட சுமந்திரனும் மேற்கொள்ளும் அரசியல் அடாவடி நன்றாக அம்பலத்துக்கு வந்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் எப்போதும் பதவிகளை வகித்துப் பழகிப்போன ராவுப் ஹக்கீமும், மனோ கணேசனும் எவ்வளவு காலத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டுக்குள் இணைந்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியது. 

இந்தியாவை முன்னிலைப்படுத்தி 13ம் திருத்தத்தை வலியுறுத்தும் தமிழர் தரப்பின் பின்னால் ஷகொள்முதல்| செய்யப்பட்ட சிலர் இயங்குவதாக புலம்பெயர் அறிவுஜீவிகள் வட்டமொன்று விலாவாரியாக விமர்சித்து வருகிறது. 

தமிழ்த் தேசியம் பேசும் சில அரசியல்வாதிகள், பிரித்தானியாவிலுள்ள ஷலெட்டர் ஹெட்| அமைப்பொன்று, புலம்பெயர் நாடுகளிலுள்ள அறிக்கையாளர்கள், தாயகத்திலுள்ள சில அரசியல் விமர்சகர்கள், நன்கறியப்பட்ட தாயக ஊடகர்கள் என குறிப்பிட்ட சிலர் இவ்விடயத்தில் உள்வாங்கப்பட்டு, தவறான பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்று சம்பந்தப்பட்ட அறிவுஜீவிகள் அரங்கில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல விபரங்கள் விரைவில் வெளிவரலாமென கூறப்படுகிறது. 

இதற்கு அடுத்ததாக இவ்வார முக்கிய சம்பவமாக யாழ்ப்பாண மாநகரசபையின் பாதீடு (வரவு செலவுத் திட்டம்) விவாதம் முக்கிய கவனம் பெற்றுள்ளது. தமிழர் பூர்வீக நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் தமிழ்த் தேசிய நாமம் பூண்ட அரசியல் தலைவர்களும் அவர்களின் கூட்டத்தினரும் மேற்கொள்ளும் படுகேவலமான அரசியல் போக்குக்கு இதனைவிட வேறு உதாரணம் தேவையில்லை. 

கடந்த சில வாரங்களாக தமிழர் தாயக பிரதேச சபைகளின் பாதீடுகள் தோல்வியடைந்ததையும் அதனால் அவைகளின் தலைவர்கள் பதவி இழந்ததையும் பார்த்து வந்துள்ளோம். சிங்கள தேசிய அரசியல் கட்சிகளால் இந்தத் தோல்விகளும் பதவி இழப்புகளும் இடம்பெறவில்லை. மாறாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் லாபப் போட்டியே இதற்கு மூல காரணம். இதுபோன்ற ஒன்றே யாழ்ப்பாண மாநகரசபையிலும் இந்த மாதம் 15ம் திகதி எதிர்பார்க்கப்பட்டது. 

இச்சபை நாற்பத்தைந்து உறுப்பினர்களைக் கொண்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 16. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 13. ஈ.பி.டி.பி. - 10. ஐக்;கிய தேசிய கட்சி - 3. சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 2. தமிழர் விடுதலைக் கூட்டணி - 1. 

ஆரம்பத்திலேயே பிளவுபடாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து (மொத்தம் 29), ஒப்பந்த அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும். அப்படி இடம்பெற்றிருந்தால் இரு கட்சியினரதும் சார்பில் மாநகர முதல்வர் பதவி இரு தரப்புக்கும் சமமாக காலப்பங்கீடு செய்யப்பட்டிருக்கும். இது நடைபெறவில்லை. 

முன்னைய முதல்வர் ஆர்னோல்டுக்குப் பின்னர் மணிவண்ணன் இப்பதவிக்கு போட்டியிட்டபோது அவர் அங்கத்துவம் வகித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவினால் பத்துப்பேர் மணிவண்ணன் பக்கம் செல்ல, மீதி மூவர் மட்டுமே முன்னணியுடன் சென்றனர். இவ்வேளையில் தமிழ்த் தேசிய கட்சிகள் இரண்டும் ஆட்சி அமைக்கக் கூடாதென்பற்காக ஈ.பி.டி.பி.யும் சிங்களக் கட்சிகளும் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டு அவர் முதல்வராக வாய்ப்பளித்தன. 

இதே நிலைப்பாடே கடந்த பதினைந்தாம் திகதி இடம்பெற்ற பாதீடு வாக்களிப்பிலும் இடம்பெற்று மணிவண்ணனைக் காப்பாற்றியது. இம்முறை மணிவண்ணனுக்கு ஈ.பி.டி.பி. ஆதரவளிக்காது என்ற நினைப்பில், கூட்டமைப்பினர் தங்களுக்குள் கூடி புதிய முதல்வரையும் தயாராக வைத்திருந்த விபரம் ஈ.பி.டி.பி.க்கு தெரிய வந்ததால், அது சரியாகக் காய் நகர்த்தி மணிவண்ணனை தொடர்ந்து முதல்வராக்கியுள்ளது. 

இதனை மணிவண்ணனின் வெற்றி என்பதைவிட கூட்டமைப்புக்குக் கிடைத்த படுதோல்வி என்பதே சரி. இந்த அரசியல் சதுரங்கத்தில் ஈ.பி.டி.பி. தன் பங்கை சரியாக விளையாடியுள்ளது. தமிழ்த் தேசிய கட்சிகளை ஒரு கூட்டாக அமைத்து, தாயகத்திலுள்ள மக்கள் சபைகளைக் காப்பாற்ற லாயக்கில்லாத நிலைக்குச் சென்றுள்ள கூட்டமைப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை எவ்வாறு, எப்படி நிறைவேற்றப் போகிறது?

அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பதின்மூன்றைக் காவிக்கொண்டு இந்தியா வட்டமிட, அதை நம்பியவாறு அவர்கள் பின்னால் அறுந்த கயிற்றில் தொங்கியவாறு கூட்டமைப்பு கூடிக்கூடி பிளவுண்டு கலைய, தெற்கில் ஆழமாகப் பாதம் பதித்துள்ள சீனா வேட்டி கட்டியவாறு வடக்கில் முதலடி வைத்துள்ளது. 

No comments