அலங்கோல அரசியலில் இன்னொரு கூட்டமைப்பு! பனங்காட்டான்


ரெலோ தலைமையில் உருவாகும் தமிழ்த் தேசிய கட்சிகளின் இணைப்பு தடம்மாறி தமிழர் - முஸ்லிம் ஒற்றுமைக் கூட்டாக மாறுகிறது. ஒன்றுமேயில்லாத 13ஐக் காட்டியவாறு இந்தியா தமிழர் தரப்பை வலம் வருகிறது. அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாகும் அமெரிக்கா தமிழர் பிரதிநிதிகளை வாசிங்டனுக்கு அழைக்கிறது. அழித்தவர்கள் மீண்டும் வேறு பாதையால் இணைகின்றனர். 

இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டதும் எதிர்பார்க்கப்படாததுமான இரண்டு நிலைக்குட்பட்டதான நெருக்குவாரத்துள் அலங்கோலப்படுகிறது. இது விடயத்தில் தமிழர் தேசமும் சிங்கள தேசமும் வேறுபடவில்லை. 

சிங்கள தேசத்தில் அரசாளும் கூட்டின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான வேறுபாடுகளும் குளறுபடிகளும் ஆட்டம் போடுவதுபோல தமிழர் தேசிய அரசியல் போக்கும் சந்திக்கு வந்து தள்ளாடுகிறது. 

கோதபாயவின் ராணுவ திமிர் போக்கு சிங்கள தேச சீத்துவக்கேடுக்குக் காரணம். சம்பந்தனின் முதுமையும் இயலாமையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிச்சல்பிடுங்கலுக்கும் நீயா நானா போட்டிக்கும் காரணம். 

இதற்கும் அப்பால் சர்வதேசம் தங்கள் கைகளையும் கால்களையும் இலங்கைக்குள் புகுத்தி தம்பாட்டுக்கு காய்களை நகர்த்துகிறது. சீனாவின் சேதனப் பசளை தரமற்றது என்று கூறியதால் இலங்கை அரசின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்து சீனா தனது சண்டித்தனத்தைக் காட்டுகிறது. நக்கினார் நாவிழந்தார் நிலையில் சீனாவிடம் கடன்பட்ட இலங்கை, நிலைமையைச் சமாளிக்க முயல்கிறது. 

இவ்வேளையில் சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் தனித்தும் கூட்டாகவும் தங்கள் வலைகளை விரிக்கின்றன. இதற்கு அவர்களுக்குத் தேவைப்படுவது தமிழர் தரப்பு. இவர்கள் இல்லையேல் அவர்கள் பாடு திண்டாட்டம். 

உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, விலைகள் அதிகரிப்பு, எரிபொருளின்மை, விவசாயிகள் பாதிப்பு, சம்பளக் கோரிக்கை என்பவற்றால் அலுவலகங்களிலும் தோட்டம் துரவுகளிலும் இருக்க வேண்டியவர்கள் பதாதைகளுடன் வீதிகளில் நிற்கிறார்கள். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு தொடர்கிறது. 

அரிசி இல்லையென்றால் மரவள்ளிக் கிழங்கையும் பாசிப் பயற்றையும் சாப்பிடுங்கள் என்று இலவச ஆலோசனை வழங்கியுள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் மூத்தவரான அமைச்சர் சாமல் ராஜபக்ச. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970ம் ஆண்டுக்கால ஆட்சிக் கோலத்தை இது நினைவூட்டுகிறது. குரக்கன் சால்வைக்காரருக்கு ஏனோ குரக்கனைச் சாப்பிடுமாறு கூற மனம் வரவில்லை. 

அமைச்சர்களின் உள்ளக மோதல்களால் பல அமைச்சுகள் முடங்கியுள்ளன. சில அமைச்சர்களுக்கும் அவர்களின் செயலாளர்களுக்குமிடையில் மோதல் நீடிக்கிறது. அமைச்சுகளிலும் அரச கூட்டுத்தாபனங்களிலும் ஆலோசனைக் குழுக்களிலும் விசாரணைச் சபைகளிலும் இதுவரை படைத்துறை அதிகாரிகளையே கோதபாய நியமித்து வந்தார். சுமார் நாற்பதுக்கும் அதிகமான அதியுயர் பதவிகளில் படைத்துறையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். 

இப்போது நம்பகமான படை அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பௌத்த பிக்குகள் பக்கம் கோதபாயவின் பார்வை திரும்பியுள்ளது. அடுத்தடுத்து சில கதிரைகளில் பிக்குகள் அமர்த்தப்படுகின்றனர். 

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்துல ஞானசார தேரர் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். தமிழர் எவரும் இடம்பெறாத பதின்மூன்று பேர் கொண்ட குழுவுக்கு பிக்கு தலைமையாகியுள்ளார். இப்பதவிக்கான இவருக்குரிய ஒரேயொரு சிறப்புத் தகுதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சட்டத்தை மதிக்காத குற்றத்துக்காக சிறைத்தண்டனை பெற்று, ஜனாதிபதியின் பாவமன்னிப்புப் பெற்ற சிங்கள தேசபக்தர் என்பது.

இவரது நியமன சலசலப்பு நீங்குவதற்குள், பரபரப்பாக அரசியல் பேசி வரும் இன்னொரு பௌத்த பிக்குவை மற்றொரு உயர்பதவிக்கு கோதபாய நியமித்துள்ளார். ராஜபக்சக்களை ஆட்சிக் கட்டிலுக்கு ஏற்றியவரும், சமீப காலமாக கோதபாயவை கடுமையாக விமர்சித்து வருபவருமான முருத்தட்டுவே ஆனந்ததேரர்,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மகிந்த ராஜபக்சவின் ஆயுட்கால விசுவாசியான ஆனந்ததேரரின் கொழும்பு அபே ராம விகாரையே இவர்களது பொதுபல கட்சியின் தலைமைப்பீடம். கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இக்கட்சியின் வெற்றிக்கு முழு மூச்சாக உழைத்த ஆனந்ததேரர், கடந்த சில மாதங்களாக கோதபாயவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றும், மகிந்தவை அரச பொறுப்பினை ஏற்குமாறும் பகிரங்கமாகக் கோரி வருபவர். 

ஆனந்ததேரரின் வாயில் ஓர் எலும்புத் துண்டைக் கவ்வக்கொடுத்துள்ளார் கோதபாய. பல்கலைக்கழக சமூகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேந்தர் பதவியை ஏற்றுள்ள ஆனந்ததேரர், இப்பதவியினூடாக தம்மை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்று சூளுரைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் - யார் வெல்லப் போகிறார் என்று?

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்ற பருவநிலை மாநாட்டுக்குச் சென்ற கோதபாயவுக்கு புலம்பெயர் ஈழத்தமிழர் சமூகம் ஷமாண்புமிகு மரியாதை| வழங்கியதை கொழும்பு ஊடகங்கள் அச்சம் காரணமாகப் போலும் அமுக்கிவிட்டன. எனினும், ஐரோப்பிய ஊடகங்கள் தங்கள் தர்மத்தை ஓரளவுக்கு நிறைவேற்றின.

முழுப்பக்க விளம்பரங்கள், விழிப்புணர்வு வாசக டிஜிட்டல் காட்சிப்படுத்தல்கள் கிளாஸ்கோ நகரை ஒரு வாரமாக மின்னலடிக்கச் செய்தன.

மாவீரர் கல்லறைகளை நிர்மூலமாக்கியவர்கள் (ராணுவத்தினர்) அந்த மண்ணில் மரங்கள் நடுகின்றனர் என்ற வாசகம், மாவீரர்கள் நினைவை அந்த மண்ணில் அவர்களே துளிர்க்க விடுகின்றனர் என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தி வலி சுமக்கும் மக்களை ஆசுவாசப்படுத்தியது. 

இந்தச் செயற்பாடுகளின் மறுபக்கமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல் அரங்கொன்று நோக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டு முயற்சி என்ற பெயரில் இந்த மாதம் 2ம் திகதி இடம்பெற்ற இந்த அரங்கம் மனோ கணேசன், ராவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கேற்றதால் ஷதமிழ் தேசிய| என்ற அடையாளத்திலிருந்து விலகி அல்லது விடுபட்டு தமிழர் - முஸ்லிம் தரப்புகளின் ஒற்றுமை அரங்கமாக மாறிவிட்டதென்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. 

ரெலோவின் முன்னெடுப்பில் புளொட்டின் அனுசரணையுடன் (இவையிரண்டும் கூட்டமைப்பின் பங்காளிகள்) சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டு என்ற இணைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் முன்னணி ஆகியனவும் சேர்ந்தன. 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உட்பட முக்கிய விடயங்களில் உருவான இந்தக் கூட்டுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது ஆதரவை பகிரங்கமாக வழங்கி வந்தார். 

சுமந்திரனின் தன்னிச்சைப் போக்குக்கு கூட்டமைப்பைப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென்பதே ரெலோ, புளொட் மற்றும் மூன்று தரப்பினரதும் அடிப்படை இலக்கு என்பதை இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மாவையரின் ஆதரவும் இதே அடிப்படையில் ஆனதுதான். 

சம்பந்தனை நேரடியாக சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் இரண்டாம் திகதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் அவர் பங்குபற்றவில்லை. சுமந்திரனை அழைக்காதமை இதற்கான காரணமாக இருக்கலாம். இதற்கிடையில் அவசரமாகக் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ரெலோவின் கூட்டத்தில் பங்குபற்றுவதி;ல்லையென முடிவு எடுத்ததுடன், ஆறாம் திகதி மீண்டும் கூடி அடுத்த நடவடிக்கை பற்றி ஆலோசிப்பதென தீர்மானித்தது. 

தமிழரசுக் கட்சி இரண்டாம் திகதிக் கூட்டத்தில் பங்குபற்றாது என்ற முடிவை ரெலோவுக்கு அறிவிக்காது மறைத்த மாவையர், ரெலோவின் முடிவை தாங்கள் ஆதரிப்பதாகவும், இக்கூட்டத்தை ஆறாம் திகதிக்குப் பின்னர் நடத்துமாறும் வேண்டினார். இது தமிழரசு எடுத்த முடிவுக்கு எதிர்மாறானது. மாவையர் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார் என்று சில வாரங்களுக்கு முன்னர் தமிழரசின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தது உண்மையாகியது. 

இரண்டாம் திகதிக் கூட்டத்துக்கு மனோ கணேசனின் ஆலோசனைக்கு இணங்க ராவூப் ஹக்கீம் தலைமை தாங்கினார். இது கூட்டத்தை ஏற்பாடு செய்த ரெலோவுக்கு ஏற்பட்ட முதலாவது சறுக்கல். இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கவிருந்த ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனுக்கு எதிர்பாராத ஏமாற்றம். மொத்தத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஐக்கியம் என்பது வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் விளிப்பதற்கு முன்னர் ஒரு விடயம் முக்கியமானது. 

தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோருடன் இணைத்தலைவராக அன்று அமைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் பின்னர் எச்சந்தர்ப்பத்தில் அதிலிருந்து விலகினார்?

2002ம் ஆண்டில் தமது குழுவினருடன் வன்னி சென்று தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த ராவூப் ஹக்கீம் பின்னர் எவ்வாறு குத்துக்கரணம் அடித்து தமிழரின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு துரோகமிழைத்தார்? இவற்றை புதிய கூட்டை உருவாக்குபவர்கள் நினைவிற் கொள்ள வேண்டும். அவசியமானால் எவரையும் மன்னிக்கலாம். ஆனால், நடந்தவற்றை மறக்கக்கூடாது. 

புதிதாக உருவாகும் கூட்டில் இணைந்தால் தங்கள் தலைமைப் பதவி பறிபோகலாமென்று தமிழரசுக் கட்சி அஞ்சுவது தெரிகிறது. நிலையான அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுக்கிறது. இவைகளில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் காணப்படவில்லை. 

1987ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதில் இந்தியா செயற்படுவதைக் காட்டுகிறது. இவ்விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகள் இந்தியாவை நம்புவதும் தெரிகிறது.

ஆனால், இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்சவர்த்தனுடன் நடத்திய சந்திப்பின்போது, இரண்டு தரப்புத் தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துக்கு அமைய அவற்றை நடைமுறைப்படுத்துவது அவசியமென கோதபாய தெரிவித்ததை இந்தியாவும் தமிழர் தரப்பும் நினைவிற்கொள்ள வேண்டும். 

பெரும்பான்மையான மக்கள் என்று கோதபாய குறிப்பிடுவது, சிங்கள பௌத்த மக்களின் விருப்பம் அவசியம் என்பதை. அதனைக் கண்டறிவது என்று அவர் குறிப்பிடுவது சர்வஜன வாக்கெடுப்பை. இதன் முடிவு என்னவாக இருக்குமென்பது எவருக்கும் தெரியாததல்ல. 

இதற்கிடையில், இந்தியத் தூதுவர் அடுத்த வாரம் கூட்டமைப்பினருடன் மீண்டும் பேசவுள்ளார் என்ற தகவலும், கூட்டமைப்பின் சுமந்திரன் தலைமையிலான தமிழ் சட்டவாளர் குழுவொன்று இ;ம்மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் அழைப்பின் பேரில் அங்கு செல்லவுள்ளது என்ற தகவலும் கசிந்துள்ளது. 

சீனா-அமெரிக்கா-இந்தியா ஆகிய முத்தரப்பின் உதைபந்தாட்டக் களமாக இலங்கை அமைந்துள்ளது. இதில் அவர்களின் உதைபந்தாக தமிழர் தரப்பு நீள்கிறது. 

கடந்த வாரப் பத்தியில் அமெரிக்க முன்னாள் செயலாளர் டீன் அச்சேசன் என்றோ கூறிய, 'நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் நாடுபவை மட்டுமே" என்ற பொருள் செறிந்த வாசகத்தையே மீண்டும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாகவுள்ளது. 

No comments