ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிர் தப்பிய ஈராக் பிரதமர்!!


ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது  ஆளில்லா வானூர்தி (Drone) நடத்திய தாக்குதலில்  அவர் காயமின்றி உயிர்தப்பியுள்ளார்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு ஆளில்லா வானூர்தி கட்டிடத்தைத் தாக்கியது. தாக்குதலில் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் மெய்க்காப்பாளர்கள் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட வன்முறை அமைதியின்மைக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

டைக்ரிஸ் ஆற்றின் குடியரசு பாலம் அருகே இருந்து ஏவப்பட்ட தாக்குதலில் மூன்று ஆளில்லா வானூர்தி பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

பல அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள பசுமை மண்டத்தில் தாக்குதல் நத்தப்பட்டிருந்தது. எனினும் இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. 

ஈராக்கிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட படங்கள், குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு SUV வாகனம் சேதமடைந்ததைக் காட்டுகின்றன.

சிறிய வெடிபொருட்கள் நிறைந்த ஆளில்லா விமானத்தின் எச்சங்கள் பாதுகாப்புப் படையினரால் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

No comments