தமிழர் தாயக குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் - கஜேந்திரகுமார்


வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார்.

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

காணி பிறழ்வு(காணி எடுத்தல் சட்டம்)  என்பது இன்று மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் மிக மோசமாக காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ்  மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. தலைமுறை தலைமுறையாக எமது மக்கள் வைத்திருந்த காணிகளே இவ்வாறு இராணுவத்தினாலும், அரசாங்கத்தினாலும் அபகரிக்கப்படுகின்றது.

அரச காணிகள், இவற்றில் மக்களே வசிக்க வேண்டும். ஆனால் அரசாங்கமே முழுமையாக இவற்றை அபகரிக்கும் நிலை காணப்படுகின்றது. உதாரணமாக அல்லைப்பிட்டியில் 80 பேர்ச் காணிகள் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

மண்கும்பானில் 70 பேர்ச் மற்றும் புங்குடுதீவு பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் அபகரித்துள்ளனர். இந்த நிலங்கள் தனியார் காணிகளாகும். அதற்கான உறுதிப்பத்திரத்தை அவர்கள் வைத்துள்ளனர். இதனை ஒவ்வொரு காலகட்டத்தில் அபகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்ல மட்டக்களப்பு மயிலத்தன மடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.இவையும் தனியார் காணிகளாகும், ஏனைய சிங்கள பகுதிகளில் உள்ள மக்களை இந்த நிலங்களை அபகரிக்க அனுமதி வழங்கப்பட்டது, இதனை அடுத்து தமிழ் மக்கள் நீதிமன்றத்தை நாடி தமக்கான நியாயத்தை கேட்டனர்.

இதன்போது குறித்த நிலம் தமிழ் மக்களின் மேய்ச்சல் நிலங்கள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், இன்றுவரை அந்த நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேறவில்லை. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அவர்கள் வெளியேற வேண்டும் என கூறியும் அவர்கள் இன்னமும் வெளியேறாது உள்ளனர்.

இவற்றுக்கு மத்தியில் எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் தமிழர் பகுதிகளை சிங்கள பகுதிகளுடன் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வடக்கில் நெடுங்கேணி பகுதியில் ஒரு பகுதி கெப்படிகொள்ளாவ பகுதியுடன் இணைத்து எல்லை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட குடிசன வரைபை மாற்ற எடுக்கும் நடவடிக்கையாகும். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பிராந்தியத்தின் ஜனநாயக பரம்பலை மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாகும்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, இதனால் பகைமை உருவாகுமே தவிர அபிவிருத்திகள் இடம்பெறாது, ஏற்கனவே வடக்கு கிழக்கில் இவ்வாறான திட்டமிட்ட இன வரைபை மாற்றியமைக்க எடுத்த முயற்சிகள் காரணமாகவே முரண்பாடுகள் ஏற்பட காரணமாக அமைந்தது.

இதனை மீண்டும் செய்ய எடுக்கும் முயற்சிகளை நாம் தமிழர் கட்சிகளாக சகலரும் எதிர்க்கின்றோம் என்றார்.

No comments