ஆஸ்ரேலியா பேர்த்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

சாவினை வென்ற தமிழின வரலாற்று சிற்பிகளான  தமிழீழ மாவீரர் நாளை போற்றும் புனிதநாள்  நிகழ்வு பேர்த் மாநகரில் இவ்வாண்டு சிறப்பாக

நடைபெற்றது. 

கனிங்ரன் சிவிக் மைதானத்தில் 27/11/2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 

அவுஸ்ரேலிய தேசியக் கொடியை பிறிமன்டல் கவுன்சிலர் சாம் வைன் ரைட் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்ரேலிய பூர்வகுடிகளின் தேசியக் கொடியை இலங்கை தமிழ்ச் சங்க உப தலைவர் திரு.சோமசுந்தரம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. கோகுலன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மாவீரர் நாள் நினைவொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, முதன்மைச் சுடரினை மாவீரன் கப்டன் அருட்குமரனின் சகோதரன் திரு யோகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் மாவீரர்களுக்கான ஈகைச் சுடர்களை ஏற்றி வைக்க துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கப்பட்டது. 

பிரதான மாதிரி கல்லறைக்கான மலர் மாலையை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.கரன் அவர்கள் அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, மேடையில் வைக்கப்பட்டிருந்த மாவீரர் திருவுருவப் படங்களுக்கு நிகழ்விற்கு வருகை தந்திருந்து அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து "கல்லறைகள் விழிதிறக்கும் கார்த்திகையே...." என்ற பாடலுக்கு மாவீரர்களுக்கான வணக்க நடனம் நடைபெற்றது.

திரு.ராஜன் மற்றும் திரு.நிமலன் அவர்கள் மாவீரர் நினைவுப் பாடல்களை வழங்கிச்சென்றனர்

சிறுவர் சிறுமியர் தமது கவிதைகளை மாவீரர்களுக்கு காணிக்கையாக்கி சென்றனர். “அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது” எனும் மாவீரர் புகழ்கூறும் பேச்சை செல்வி. சிவானியரசி அவர்களும் மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட வீரவரலாற்றை பற்றி செல்வி. அக்சயா பேசினார்கள்.

மாவீரர்நாள் சிறப்புரையை திரு.வாசன் அவர்கள் வழங்க, சாம் வைன் ரைட் அவர்களும் மாவீரர் நாள் உரையை வழங்கி சென்றார்.

தொடர்ந்து தமிழர் பாரம்பரிய கலையாகிய பறை இனவிடுதலை, வீழமாட்டோம், வெல்லும் வரை செல்வோம் என்று வீரமுழக்கத்துடன் இசைக்கப்பட்டது. தொடர்ந்து “மேகம் வந்து கீழிறங்கி... “ என்ற பாடலுக்கு சிறுமிகளின் நடனம் இடம்பெற்றது.

மாவீரர்நாள் நிகழ்வுகளை செல்வி. அபி மதிவாணன் அவர்களும் திரு.நிமல் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தனர். 

பேர்த்தில் முதன் முறையாக திறந்தவெளியரங்கில் மாவீரர் துயிலும் இல்ல மாதிரி அமைப்புடன் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவுகூரப்பட்டதுடன் இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments