சாணக்கியன் வாய்மூடி இருப்பது நல்லது!



கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்; கனடா தேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை தான் நடாத்தியதாக உரிமை கோரியுள்ளமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

அவரது இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.


நான்கு வருடங்களையும் கடந்து தொடரும்  எமது போராட்டத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் என பல நாட்களில் பாரிய பேரணிகளையும், போராட்டங்களையும் நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தோம். 

இதே போன்று கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று பாரிய பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத் தலைவிக்கு நீதிமன்றால் பங்குபற்றுவதற்கான தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத் தலைவியினால் பேரணி வழி நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பேரணியை முன்னேற விடாது பாதை மூடப்பட்டது. இந்நேரத்தில் எமது பேரணிக்கு ஆதரவு தர திரண்டிருந்த பொது மக்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினராலும் மூடப்பட்ட பாதை உடைத்து எமக்கு வழி சமைத்துத் தரப்பட்டது. எமது போராட்டம் வெற்றிகரதாக நிறைவேறியது.

இந்நிலையில் இரா.சாணக்கியனதும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களதும் செயற்பாடானது அவர்கள் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை. மக்களின் வாக்குகளால் தான் அவர்கள் நாடாளுமன்ற கதிரையில் அமரும் பெரும் பேறையும் பல வரப்பிரசாதங்களையும்  பெற்றார்கள். ஆனால் இவற்றை தொடர்ந்து அனுபவிக்கும் பேராசையில் வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாத இவர்களைப் போன்றவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. தமது சுகபோகங்களை தக்க வைப்பதற்காக எங்கள் கண்ணீரில் எவரும் அரசியல் செய்ய வேண்டாம். நாம் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிக்கான இந்த போராட்டத்தை நீதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, அல்லது அரசியல் கட்சியோ அல்லது தனி நபரோ அல்லது எமது சங்கம் தவிர்ந்த வேறு அமைப்புக்களோ எமது போராட்டத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் கூடாது என தெரிவிக்க்பபட்டுள்ளது.


No comments