காவல்துறைக்கு தலையிடி!கொழும்பில் இன்று (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஆதரவாளர்களை ஏற்றிவரும் தனியார் பஸ்களை பொலிஸார் திருப்பியனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில இடங்களில், அந்த ஆதரவாளர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவ்வாறான இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கியிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில இடங்களில் ஆதரவாளர்கள், வீதியில் படுத்து புரண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருக்கும் தங்களால், கொழும்புக்கு ஏன் செல்லமுடியாது?, அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்ன? உங்களுடைய சம்பள உயர்வுக்காகவும் போராட்டம் செய்வதற்காகதான், கொழும்புக்குச் செல்கின்றோம் என பொலிஸாரிடம் பஸ்களில் வந்தோர் தெரிவித்தனர்.

எனினும், மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமையவே தங்களால் செயற்படமுடியுமெனத் தெரிவித்த பொலிஸார், அவ்வாறான பஸ்களை அவ்விடத்தில் இருந்தே திருப்பியனுப்பி​விட்டனர். இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில், இந்தப் போராட்டம் இன்று (16) முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments