தொடங்கியது வடக்கு ஆளுநர் ஆட்டம்!இலங்கையின் காவல்துறைக்கு துணை குழுவொன்றை உருவாக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறை பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறை பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் ஆளுநர் தெரித்துள்ளார்.

ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை சமூக காவல்துறை பிரிவாக வழிநடத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் தொடர்களை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் இளைஞர்களிற்கு அரசு அழைப்பு விடுத்துவருகின்ற போதும் அம்முயற்சி தோல்வியடைந்தேவருகின்றது.

முன்னதாக இலங்கை இராணுவத்திற்கு கூலி தொழிலாளர்களாக தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றிருந்தது.

அதேவேளை சுமார் 12ஆயிரம் வரையான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு குழுவென்ற பேரில் இராணுவ பண்ணைகளில் தொழிலாளர்களாக பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையிலேயே வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதலுடன் சமூக காவல் குழுக்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம்   செயல்படுத்தப்படுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே திட்டமாகும்.

அணிகளிற்கான இளைஞர்களை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments