அகப்பிரச்சனையை புறப்பிரச்சனையாக்காதீர்!இங்கே நடக்கின்ற எங்களுடைய அகப் பிரச்சினைகளை நாங்கள் புறப் பிரச்சினைகளை கையாள்வது போல ஒருபோதும் கையாண்டு விடக்கூடாது. அதற்கான அணுகுமுறை வேறாக இருக்க வேண்டும். ஆயர் மன்றத்தின் அறிக்கை தவறானதாக இருக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு அணுகுவது என்பதில் நாங்கள் உண்மையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய சில நாட்களாக மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக வடகிழக்கு ஆயர் மன்றம் விடுத்த அறிக்கை தொடர்பில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அதனை காரசாரமாக கண்டிக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் அறிக்கைகளை விட்டு இருக்கின்றார்கள்.


தமிழ் தேசிய நிகழ்வுகளில் பெரிதும் பங்கு பெறாத இந்து மதத்தை சார்ந்தவர்களும் இது தொடர்பாக அறிக்கையை விட்டுள்ளனர்.


வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் நவம்பர் 20ம் திகதியை  போரின் மரித்தவர்களை நினைவுகூரும் நாளாக அனுஷ்டிக்கும் படி கூறியிருந்தது. 20ம் திகதிக்குப் பின்னருள்ள வாரம் நீண்டகாலமாக மாவீரர்தின வாரமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.உயிர்மரித்த அனைவருக்குமான ஒரு நினைவு கூறல் ஆக 20ம் திகதியை அனுஷ்டிக்குமாறு கூறியது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. 


இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்று சொன்னால் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசமாக இருக்கின்றார்கள். தேசம் என்பது ஒரு மக்கள் திரளை குறிக்கின்றது. தேசியம் என்பது அந்த மக்களின் கூட்டு பிரக்ஞையை குறிக்கிறது. தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களின் கூட்டு பிரக்ஞை. 

மக்களை ஒன்றினைப்பதற்கு எவை எவை எல்லாம் தடையாக இருக்கின்றதோ அவை எல்லாவற்றையும் அகற்றிக் கொண்டு செல்லுகின்ற பொழுது தான் எங்களுடைய அரசியல் எதிர்காலம் முன்னோக்கி செல்லக்கூடியதாக இருக்கும்.


இங்கே நடக்கின்ற எங்களுடைய அகப் பிரச்சினைகளை நாங்கள் புறப்பிரச்சினைகளை கையாள்வது போல ஒருபோதும் கையாண்டு விடக்கூடாது. அதற்கான அணுகுமுறை வேறாக இருக்க வேண்டும். ஆயர் மன்றத்தின் அறிக்கை தவறானதாக இருக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு அணுகுவது என்பதில் நாங்கள் உண்மையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். 


கத்தோலிக்க ஆயர்கள் இந்துமதத் தலைவர்களை விட தமிழ் தேசிய அரசியலில் கூடுதலாக அக்கறை காட்டி செயற்ப்பட்டவர்கள். இராயப்பு ஜோசப் கருணாரட்ணம் அடிகளார் வரை பலரும் இதற்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்திருக்கின்றார்கள். இறுதிப்போர் காலத்தில் பல அருட்தந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த கூடிய வகையிலே நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது.

இந்த விவகாரத்தில் ஆயர்களை நாங்கள் நேரடியாக சந்தித்து அவர்களோடு  கலந்துரையாடி ஒரு பொது முடிவுக்கு வருகின்ற அணுகுமுறைதான் உண்மையில் தமிழ் தரப்பு பின்பற்றியிருக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன்.


தமிழ் மக்கள் தேசமாக அணிதிரள வேண்டும். எங்களுக்குள்ளேயே நாங்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது. தமிழ்தேசிய நீக்கம் செய்யப்பட்ட அரசியல் முன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதிலேயே தமிழ்த்தேசிய எதிரிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள். காலத்துக்குக் காலம்   இவ்வாறு சிறிய சிறிய விடயங்களைக் கூட பெரிதாக காட்டுவார்கள். அதற்கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்கக்கூடாமல் இதனை ஒரு கலந்துரையாடல் மூலம் இந்த விவகாரத்தை தீர்த்து எல்லோரும் இணைந்து எங்கள் அரசியல் செயற்பாடுகளை எப்படி கொண்டு போகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது தான் பொருத்தம் உடையதாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.


நினைவேந்தலை தடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுத்திருப்பது தொடர்பில் கேள்விழுப்பிய போது, இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமை அவர்களது உறவுகளுக்கு இருக்கின்றது. அதை அவர்கள் சொல்வது மாதிரி வன்முறை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களையும் நினைவுகூருவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது . ஆகவே நினைவுகூரல் உரிமையை மறுப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.


தமிழ் மக்களுடைய உறவுகளைப் பொறுத்தவரை நினைவு கூரல் என்பது கூட்டாக நினைவு கூருவதன் மூலம் உளரீதியாக ஆற்றுப்படுத்தலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதுவும் அவர்களுடைய நினைவிடங்களுக்குச் சென்று நினைவு கூருவதன் மூலம் அந்த உள ஆற்றலை அவர்கள் மேலும் வலுப்படுத்திக்கொள்வர்.


தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர் நீத்தவர்களின்  நினைவுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே இந்த உரிமையில் கை வைப்பதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆகவே நினைவேந்தல் உரிமையே நடைமுறைப்படுத்துவதற்கு எல்லாத் தரப்புக்களும் பல்வேறு தளங்களில் இருந்தும் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அரசியல் தலைமைகளும் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.


அரசியல் தலைமை நாங்கள் நினைவேந்தலை செய்யத்தான் போகின்றோம் என்று ஒரு முடிவு எடுத்து அதனை அவர்கள் செய்பவர்களாக இருந்தால் இந்த அரசாங்கத்தால் அதனைப் பெரிதாக தடுத்து விடமுடியாது.


இலங்கையை பொறுத்தவரையில்  வன்முறையில் ஈடுபட்டவர்களை நினைவுகூர  கூடாது என்றால் ஜேவிபியினர் எவ்வாறு நினைவு கூறப்படுகிறார்கள்.  அவ்வாறிருக்கையில் தமிழ் மக்களுக்காக போராடியவர்களை நினைவுகூரக் கூடாது என்று எவ்வாறு கூற முடியும் என கேள்வி வலுவாக எழுகின்றது.


 நினைவு கூரல் என்பது நீண்ட காலமாக பின்பற்றி வந்த அரசியலை வைத்திருப்பதற்கு பெரிதாக உதவக் கூடிய ஒன்றாகவே இருப்பதால் அதனை  இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நினைவு கூறலை தடுத்து வருகின்ற போக்கு காணப்படுகின்றது.உயிரிழந்த போராளிகளை  நினைவு கூர கார்த்திகை மாதத்தையும் போரில் உயிரிழந்த பொதுமக்கள் அஞ்சலிக்காக மே மாதத்தை தெரிவு செய்து கொண்டனர். இதனை உறுதியாக பின்பற்றி  நாங்கள் செயற்படுவது தான் எதிர்காலத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

No comments