தலைவர்கள் இல்லாத இனத்தில் தரகு முகவர்கள் அட்டகாசம்! பனங்காட்டான்


முழுமையான பங்கேற்புடன் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்கு ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்த வேண்டிய தமிழர்

தரப்பு தலைவர்கள் இல்லாமையால் தரகு-முகவர்களிடம் சிக்கித் தள்ளாடுகிறது. சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையால் நாட்டின் இறையாண்மை பறிபோய்விடுமென கூக்குரலிடுபவர்கள் 1959ல் பிரதமர் பண்டாரநாயக்க கொலை விசாரணைக் குழுவில் எகிப்து, கானா நாட்டு நீதிபதிகள் இடம்பெற்றதால் இறையாண்மை அன்று பறிபோனதை மறந்து விட்டார்களா?

தமிழர்களின் முக்கால் நூற்றாண்டுகால இனப்பிரச்சனைக்கான தீர்வும், முள்ளிவாய்க்கால் போர்க்குற்றத்துக்கான நீதி விசாரணையும் இப்போது ஜெனிவாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. 

சிங்கள தேசம் இந்த விவகாரங்களை திட்டமிட்டு மிகலாபகரமாக கையாள்கிறது. சிங்களத் தரப்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இவ்விடயத்தில் இவர்களின் செல்நெறிப் பாதை ஒன்றுதான். அது பிளவுபடாத சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம். 

தமிழர் தரப்பு 2001லிருந்து விரும்பியோ விரும்பாமலோ 2009 வரை ஒன்றாக நின்றது. பின்னர் இரண்டாகி, கடந்த பொதுத்தேர்தலில் மூன்றாகி, தமிழ் தேசிய இலக்கு என்பது தமிழ் ஆசன இலக்காக மாறி, மக்களை மாக்களாக்கி இழுத்துச் செல்கிறது. 

சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையில் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி ஆகிய மூன்றும் தங்களை தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளம் காட்டி நிற்கின்றன. இவர்களிடம் மொத்தம் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் போன்றவர்கள். 

இந்த வருட ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு முதல் கடிதம் அனுப்பப்படும்போது அதில் மூன்று தலைவர்களும் ஒப்பமிட்டனர். அடுத்து, இரண்டாம்-மூன்றாம் கடிதங்கள் அனுப்ப வேண்டிய நேரத்தில் நீயா நானா என்று மீண்டும் பிரிந்து விட்டார்கள். அந்தக் கடிதங்களும் அனுப்பப்படவில்லை. 

கடந்த மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 46வது அமர்வு ஆரம்பிக்கையில் மீண்டும் கடித விவகாரம் முளைவிட்டது. இப்போது பிரச்சனை கூட்டமைப்பின் பங்காளிகளுக்குள். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தனித்தனியாக ஒரு கூட்டை ஏற்படுத்தும் இலக்குடன் இது ஆரம்பமானது. 

ஓர் இளம்பெண்ணை மூவர் சமகாலத்தில் காதலித்து, அவர் தமக்கேயுரியவர் என்றவாறு  தனித்தனியாக காதல் கடிதம் எழுதுவது போன்று இந்தக் கடித விவகாரம் அமைந்தது. கடிதக்காரர் போட்டியால் அந்த இளம்பெண் அனைவரிடமிருந்தும் தப்பிக் கொண்டது போன்றதே ஜெனிவா நிலைமை. 

கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தம்பாட்டில் ஒரு கடிதத்தை தயாரித்தனர். இதில் விக்னேஸ்வரன் கூட்டணியும் இணைந்தது. அவரது பங்காளிகளான சுரேஸ் பிரேமச்சந்திரனும், என். சிறிகாந்தாவும் சேர்ந்து கொண்டனர் (கூட்டமைப்பினரை பழிவாங்க நல்லதொரு சந்தர்ப்பம் விக்னேஸ்வரனின் கூட்டணிக்குக் கிடைத்தது). இந்த ஐவரும் ஒப்பமிட்ட கடிதம் முதலில் ஜெனிவாவுக்குப் பறந்தது. 

கூட்டமைப்புக்குள் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் உள்ளே நுழைக்கப்பட்டவர் ஷசு(ம்)மா| இருக்கவில்லை அவரும் ஒன்றைத் தயாரித்தார். இதில் விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் புரிந்தனர் என்ற தரு~;மன் அறிக்கையின் வாசகம் வேண்டுமென்று திணிக்கப்பட்டதென்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியினருக்குள் பிளவு ஏற்பட்டது. 

இதனால் இன்னொரு கடிதத்தை தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் தயாரிக்க கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களும் பிரமுகர்களுமென ஒன்பது பேர் ஒப்பமிட்டனர். இது ஜெனிவாவுக்கு சென்றதாகவும், செல்லவில்லையெனவும் சொல்லப்படுகிறது. 

ஷசும்மா| கூட்டமைப்புக்குள் நுழைக்கப்பட்டவர் தாம் தயாரித்த கடிதம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்கு உட்பட்டது என்று கூறி அதுவே கூட்டமைப்பின் அதிகாரபூர்வ கடிதம் என்றும் சொன்னார். அதனை நிரூபிக்கும் வகையில் சம்பந்தனும் அதில் ஒப்பமிட்டு, கீழே தமிழரசு, ரெலோ, புளொட் எம்.பிக்களின் பெயர்களையும் பொறித்து (ஒப்பமின்றி) ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்தார். 

அன்றிலிருந்து ஆரம்பமான கூட்டமைப்புக்குள்ளான பிளவு இப்போது பல்கிப் பெருகி அறுகுபோல் வேரூன்றி, ஆலமரம்போல் விழுதெறிந்து.... பார்வைக்கு இப்படியாகி விட்டது. சொல்லப் போனால் அதனைத் தயாரித்த அந்த ஒருவரை ஓரம் கட்ட வேண்டுமென்ற முனைப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தோழன்புள்ள மாவை சேனாதிராஜாவும், செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் ஒன்றிணைந்து, தங்களுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு என்றும் நாமம் சூட்டியுள்ளனர். 

இதன் அடுத்த கட்டமாக இந்த மும்மூர்த்திகளும் சம்பந்தனைச் சந்தித்து சமந்திரன் மீதான புகாரை பட்டியலிட்டு அவரின் காதுக்குள் ஓதியுள்ளனர். எப்போதும் கண்களை மூடியவாறிருக்கும் மகாதலைவர் புகாரினை உள்வாங்கினாரா அல்லது ஆள்துயிலில் இருந்தாரா என்பது சில நாட்களில் தெரியவரும். 

தமது குலதெய்வமான காளிதேவியின் வாகனம் எனக்கூறி சிங்கக் கொடி ஏந்தியவரும், எக்கராஜ்ய என்ற ஒற்றையாட்சியுள் தீர்வு கேட்பவரும் பிரிக்க முடியாத இரட்டையர்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்காலம் இருப்பதே இன்றைய யதார்த்தம். 

ஜெனிவா தீர்மானத்தின் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாதென்று கோதபாய தரப்பு நிராகரிக்கும் அதேவேளையில், அதனை சர்வதேசத்திடம் வலியுறுத்த வேண்டிய தமிழ்த் தேசிய கட்சிகள் தமக்குள் பிரிந்து பிளந்து கூறுபட்டு, மூன்றாகி - நான்காகி - ஐந்தாகி அடிபட்டு தமிழினத்தை நலிவடையச் செய்து கொண்டிருப்பதை தாயக மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் உறவுகளும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

அடுத்த மாதம் தமது இரண்டாண்டை நிறைவு செய்யப்போகும் கோதபாய ராஜபக்ச முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் கலந்து கொண்டு தமது முடிவை அழுத்திச் சொன்னார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இதனையே மீண்டும் மீண்டும்  சொல்கிறார். 

2015ம் ஆண்டில் மனித உரிமைப் பேரவையில் 30:1 தீர்மானம் இலங்கை அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது. போர்க்குற்ற பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை என்ற தீர்மானத்தை நிராகரித்த கோதபாய தரப்பு, கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 46:1 தீர்மானத்தையும் நிராகரித்துவிட்டது. உள்நாட்டுப் பிரச்சனைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க தாங்கள் ஒருபோதும் தயாரில்லை என்றும், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் சிங்கள மக்களுக்கு கேட்கும் வகையில் கோதபாய தரப்பு உரத்துக் கூறி வருகிறது. 

2009ம் ஆண்டு மே மாதம் அன்றைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பில் வைத்து வெளியிட்ட கூட்டறிக்கையின் அடிப்படையிலேயே போர்க்குற்ற விவகாரம் ஜெனிவாவுக்குச் சென்றது என்பதை கோதபாயவும் ஜி.எல்.பீரிசும் மறந்துவிட்டனரோ அல்லது மறைத்து நடிக்கின்றனரோ தெரியவில்லை. 

இறையாண்மை என்பது ஒரு நாட்டுக்கு அல்லது ஆட்சி புரியும் அரசுக்கு உண்டென்று கூறுவது போன்று இனங்களுக்கும் உண்டு. ஈழத்தமிழர் தங்களின் பூர்வீக நிலப்பரப்பில் காலாதிகாலமாக வாழ்ந்து வரும் இறையாண்மை கொண்டவர்கள். எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்டவர்கள் என்பதால், எண்ணிக்கையில் குறைவானவர்களை நசுக்கிவிட்டு தமக்கு மட்டுமே இறையாண்மை உண்டென்று கூற முடியாது. 

ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களைப் பலி கொடுத்த இறையாண்மையுள்ள ஓர் இனம், பத்தாண்டுகளைத் தாண்டியும் உள்நாட்டின் விசாரணைப் பொறிமுறையில் நீதி கிடைக்காத நிலையில், சர்வதேசத்தின் உதவியோடு அவர்களிடம் நீதியை வேண்டுவதில் தவறென்ன? சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையைக் கண்டு குற்றம் புரியவில்லை என்பவர்கள் எதற்காக அஞ்ச வேண்டும்?

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் கடந்த மாதம் முன்வைத்த வாய்மூல அறிக்கையில், அவரது அலுவலகத்தில் இலங்கையின் போர்க்காலம் தொடர்பான 120,000 வரையான தரவுகளும் ஆவணங்களும் உள்ளன என்றும், மேலும் சேகரிக்கப்படுகின்றன என்றும் ஒரு தகவலை முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தினார். 

இவைகளைச் சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், எதிர்காலத் தேவைக்கென ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தவும் ஒரு செயலகம் தனியான உருவாக்கப்படுகிறது என்றும், இதில் பணிபுரியவென 13 துறைசார் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டியிருந்தார். 

இந்த விடயம்தான் இலங்கை அரசை உறுத்துகிறது. போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் ஆட்சியில் இருந்தவர் (ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச), போரை வழிநடத்தியவர் (கோதபாய), படுகொலைகளை புரிந்தவர்கள் (கமால் குணரத்ன, சவேந்திர சில்வா உட்பட பலர்) ஆகியோர் இன்றைய ஆட்சியில் பிரதான தூண்களாக இருப்பவர்கள். சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை போர்க்குற்றத்தை நிரூபிக்குமானால் இவர்களே தண்டனைக்குரியவராவார்கள். 

இதனாலேயே சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை இவர்கள் மறுக்கிறார்கள். தங்கள் மீதான குற்றங்களை நிரூபிக்கவே போர்க்குற்ற ஆவணங்கள் சேகரிக்கப்படுவதை, மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்கால தேவைக்காக பத்திரப்படுத்துவது என்று குறிப்பிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். 

இவ்வேளையில் இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக உடந்தையாக செயற்படக்கூடிய வகையில், தமிழர் தரப்பு சிதைந்துபோய் ஊடக அமர்வுகளிலும் அறிக்கைப் போர்களிலும், பத்திரிகைகளுக்குப் படம் காட்டுவதிலும் காலத்தை அவமாக்குகிறது. 

உண்மையைச் சொல்வதானால் இப்போது தமிழர்களுக்கு தலைவர் என்று அடையாளம் காட்ட ஒருவரையுமே காணவில்லை. கும்பகர்ண படலத்தில் ஒருவர். பேசிப் பேசியே பேச்சாளராகிய ஒருவர். கடிதத் தலைப்புகளுடன் தோழன்புள்ள தலைவர்கள். தமிழரசுக்குள்ளும் காளான்  தலைவர்கள். சொல்லப் போனால் தரகர்களும் முகவர்களும் தமிழர் சமூகத்தில் அதிகமாகி விட்டனர். 

இறுதியில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையால் இலங்கையின் இறையாண்மை பறிபோய்விடுமென்ற கூவிக்கூவி குளறுபவர்களுக்கு ஞாபகமூட்ட ஒரு சிறு குறிப்பு இது:

1959ம் ஆண்டு அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். 1963ம் ஆண்டில் பிரதமராகவிருந்த அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க தமது கணவரின் படுகொலை விசாரணைக்கென விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தார். எகிப்து நாட்டின் நீதிபதி அப்துல் யூனிஸ், கானா நாட்டின் நீதிபதி ஜி.எல்.மில்ஸ்-ஓடோ ஆகிய இருவரும் இக்குழுவில் இடம்பெற்று விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். 

இதனால் இலங்கையின் இறையாண்மை 62 ஆண்டுகளுக்கு முன்னரே பறிபோனதென்பது இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையா?

No comments