பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 25 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு!

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ

விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.10.2021) செவ்வாய்க்கிழமை இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் துணைப்பொறுப்பாளர் அன்டனி அவர்கள் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு லெப்.கேணல் நாதன் அவர்களின் சகோதரியும் கப்டன் கஜன் அவர்களின் சகோதரனும் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

இம்முறை குறித்த நிகழ்வில் லெப்.கேணல் நாதன் அவர்களின் சகோதரி கனடா நாட்டில் இருந்து பிரான்சு வருகைதந்து குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, தமிழர் மனித உரிமை மையப் பொதுச் செயலாளர் திரு.கிருபாகரன் ஆகியோர் குறித்த மாவீரர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதாக தமது நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.


குறித்த நிகழ்வில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவாக இன்று வெளியான ஈழமுரசு இதழும் அனைவருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

No comments