நினைவேந்தல் தடை:வலிகிழக்கு கண்டித்தது!



தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தனது கண்டனத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. 

இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதேச சபை உறுப்பினர் ஞனகுனேஸ்வரி கமலச்செல்வம் தவிசாளரின் அனுமதியுடன் விசேட பிரேரணை ஒன்றை முன்வைத்தார். 

அப் பிரேரனையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தியாகி திலிபனுக்கு நினைவேந்தலை மேற்கொள்ள முயற்சித்தபோது அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைகளை மீறி கைது செய்யப்பட்டுள்ளார். அதனை இந்த கௌரவ அவை கண்டிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். 

அமர்வில்யின் மீது கருத்துரைத்த தவிசாளார், அடிப்படையில் நினைவு கூர்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. அதனை யாரும் தடுக்கக் கூடாது. மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது. நினைவேந்தலை மறுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்தி பொலிசார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களின் கைதுகள் தொடர்பிலும் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம் என்றார். 

அதனை சபையில் இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார். 

No comments