விளக்கம் வேண்டும் - சத்தியலிங்கம் கடிதம்!!


ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பியதாக பகிரங்கமாகியுள்ள ஆவணத்தில் காணப்படும் கையொப்பங்கள் தொடர்பில் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் எட்டு உறுப்பினர்களிடத்தில் தெளிவுபடுத்தல் கடிதங்களை அனுப்பி வைக்குமாறு அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் எழுத்துமூலம் கோரியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணையை வலியுறுத்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஆர்.யோகேஸ்வரன், என்.சிறிநேசன், ஈ.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன் உள்ளிட்டோர் 'தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்’ என்று தலைப்பிடப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்டதாக ஆவணமொன்று பகிரங்மாகியிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆவணத்தில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டார்களா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தலொன்றை பெறுவதென கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அதில் பங்கேற்ற தலைவர் மாவை.சேனாதிராஜா, சிரேஷ்டதலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில்பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நேற்றைய தினத்தில் உறுப்பினர்களிடத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக தெளிவு படுத்துமாறு கோரிக்கை விடுத்து பதில்பொதுச்செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் கடிதத்தலைப்பில் கையொப்பமிட்டமை தொடர்பாக என்று தலைப்பிடப்பட்டுள்ள அக்கடித்தில் 

ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களிற்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிக்கப்பட்ட கடிதத்தலைப்பில் ஓர் கடிதம் வரையப்பட்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டு அனுப்பியதாக ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் கையொப்பமிட்டீர்களா என்பதை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது உள்ள கொரோனா நிலை காரமாக கடிதப்போக்குவரத்து சீராக நடைபெறாமையால் தங்களது பதிலையும் மின்னஞ்சல் மூலமாக அல்லது சமூக ஊடக தொடர்பாடல் செயலிகள் மூலமாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஏற்கனவே கடந்தவாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி அதுபற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டமையால் அவருக்கு கடிதம் அனுப்பபடவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் தெளிவுபடுத்தும் கடிதத்தினை கோரும் வகையில் பதில்பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதத்தினைப் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் 'தம்மிடத்தில் விளக்கம்கோரும் தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது. அரசியல் பீடம், மத்தியகுழு கூடாத நிலையில் எவ்வாறு அத்தகையதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது என்று பதில்பொதுச்செயலாளரிடத்தில் கேள்விகளை தொடுத்துள்ளனர். 

எனினும், குறித்த கடிதக் கோரிக்கையானது விளக்கம் கோரியதாக அமையாது என்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெளிவுபடுத்தலொன்றாகவே கோரப்படுகின்றது என்றும் பதில் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் அடுத்தகட்டம் என்ன செய்வது என்பது குறித்து மேற்படி தமிழரசுக்கட்சியின் எட்டு உறுப்பினர்களும் ஆலோசித்து வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments