பல வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!!


கைதுசெய்யப்பட்டு பல வருடங்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தின்போது 2009 மே மாதம் 18 ஆம் திகதி அவர் படையினரிடம் சரணடைந்திருந்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னர் ஒரு மாதகாலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் 2009 ஓகஸ்ட் மாதம் பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு, பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற கட்டளைப்படி புனர்வாழ்வுக்கு உட்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டு, ஓராண்டு புனர்வாழ்வு நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் கைதுசெய்யப்பட்ட அவர், வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments