கொரோனா: இயங்குகின்றது உடுவில் பிரதேச செயலகம்உடுவில் பிரதேச செயலகத்தில் பல உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அங்கு முறையான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இன்றி பணிகள் இடம்பெற்று வருகின்றது என உத்தியோகத்தர்களும் அவர்களின் உறவினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அலுவலகத்தில் பணியாளர்களை குறைத்து பணிகளை ஆற்றுமாறு அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் அறிவித்திருந்தது. ஆனால், உடுவில் பிரதேச செயலகத்தில் இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

மேலும், இந்த அலுவலகத்தில் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சில பணியாளர்கள் பணியாற்றினர். அவர்களும் கட்டாயம் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் இப்போது அவர்கள் கொரோனா நோய் அறிகுறிகளுடன் வீடுகளில் தங்கியிருக்கின்றனர் எனவும் உறவினர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

இதேவேளை, பிரதேச செயலரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவரோடு அருகில் இருந்து தினமும் பயணித்த பிரதேச செயலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை. அவர் தினமும் அலுவலகத்திற்கு சமூகளிக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கும் கொரோனா அறிகுறிகள் அதிகம் இருந்தபோதிலும் அவர் ஒருசில நாள்கள் வீட்டில் நின்றுவிட்டு பணிக்கு திரும்பினார் எனவும் தற்போது திட்டமிடல் பிரிவில் ஆறு வரையான உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிரதேச செயலரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தும், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் இருந்தபோதிலும் இதுவரை இருவரும் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யவில்லை எனவும் தெரியவருகின்றது.

தற்போது அலுவலகத்தில் பல உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் ஏனைய பணியாளர்கள் தொடர்ந்தும் பணிக்கு வரவேண்டும் என பிரதேச செயலரும் ஏனைய உயர்நிலை உத்தியோகத்தர்களும் அழைக்கின்றனர். இதனால் உத்தியோகத்தர்களும் உறவினர்களும் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அலுவலகம் வழமைபோன்று இயங்கிவருகின்றமை தொடர்பாக மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களும் எந்தவித நடவடிக்கைளும் எடுக்கவில்லை எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 

No comments