காங்கேசன்துறை காவல் நிலையம் முன் உடலம்!யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக  பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். அதனால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.

பொலிஸ் நிலையம் முன்பாக , யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை  வீதியின் ஓரமாக  ஒருவர் வீழ்ந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவித்தனர்.

இன்று நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

No comments