நுவரெலியாவில் தமிழ் இளைஞர்கள் மரணம்!நுவரெலியா- நோட்டன், வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று, நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளை தோட்டத்தை சேர்ந்த (38 வயது) சின்னையா ராஜா, புத்தளம்- ஹலாவத்தை பகுதியை சேர்ந்த (21 வயது) சச்சிந்த திலசான் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டுக்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில், ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அணைக்கட்டில் நீராடச் சென்றவர்களில் இருவர், நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, சின்னையா ராஜா என்ற இளைஞன் நீரில் மூழ்கியபோது, சஜிந்த டில்சான் என்பவர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் நேற்று மாலை, முன்னெடுத்திருந்த நிலையில், இன்று காலை அவர்களிருவரதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments