ஜெனிவா ஆரம்பமாக முன்னர் கோதபாயவை சந்திப்பதற்கு சம்பந்தன் விரும்புவது ஏன்? பனங்காட்டான்


1978க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று தெரிவித்த எந்த அரசும் அதனைச் செய்யவில்லை. மைத்திரி - ரணில் கூட்டாட்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்தும் நாலரை ஆண்டுகளில் அது நிறைவேறவில்லை. தற்போதைய கோதபாய அரசின் காலத்தில் இது நிறைவேறாது என்று தெரிந்தும் கோதபாயவை சந்திப்பதற்கு கூட்டமைப்பின் சம்பந்தன் ஆர்வம் காட்டுவது எதற்காக?

கோதபாய தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட முடிவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலில் இந்த மாற்றம் அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. 

தொடரும் பேரிடர் இலங்கையை மயான பூமியாக்கியுள்ளது. நித்தம் நித்;தம் மரணிப்போர் தொகை ஏறிச் செல்கிறது. ஓரிரு வாரங்களுக்கு முழுமையான முடக்கத்தை ஏற்படுத்துமாறு மருத்துவ தரப்பினர் கோரி வருகின்ற போதிலும் வரட்டுக் கௌரவம் அதற்கு இடமளிக்க மறுக்கிறது. 

பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கவனஈர்ப்புகள் நாடு முழுவதும் பரவியுள்ளது. மாணவர்களின் மெய்நிகர் கல்விப் போதனை முடக்கப்பட்டுள்ளது. விலைவாசி ஏறிக் கொண்டு போகிறது. ஏழை மக்களின் உணவாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாண், இன்று பணக்காரர்களாலும் வாங்க முடியாதவாறு விசம்போல் விலையேறுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு. 

சகல பிரச்சனைகளுக்குமான நிவாரணமாக ஏழு அமைச்சர்களை சங்கீதக் கதிரைப் பாணியில் இடம் மாற்றி படம் காட்டியுள்ளார் கோதபாய. 

ஆசிரியர் போராட்டங்களைத் தீர்க்க முடியாது தத்தளித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனிவாவைக் கையாள்வதற்காக வெளிவிவகார அமைச்சராக்கப்பட்டுள்ளார். ராஜரீக நடைமுறைகளைப் பின்பற்றத் தவறி வெளிவிவகாரத்தைப் போட்டுடைத்த தினேஸ் குணவர்த்தன, மாணவர் கல்வியைச் சீரழிப்பதற்காக கல்வி அமைச்சராகியுள்ளார். 

கொரோனாவிற்கு ஆயுர்வேத குடிநீரை சிபார்சு செய்து, நேர்த்திக்கடனை ஆற்று நீரில் குடநீரை ஊற்றி நிறைவேற்றிய சுகாதார அமைச்சர் பவித்திராதேவி (இவரை சில ஊடகங்கள் சுகாதாரதேவி என வர்ணித்துள்ளன) வன்னியாராய்ச்சி, பஸ்சும் ரெயிலும் ஓட்டுவதற்காக போக்குவரத்து அமைச்சராக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு பெண்ணான இவர் அழுதவாறே புதிய பதவியை ஏற்றுள்ளார். 

பொய்யும் பித்தலாட்டமும் கைவரப்பெற்ற அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல, கொரோனா ஒழிப்புக்கான புதிய சுகாதார அமைச்சராகியுள்ளார். காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும், டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

கூட்டத்துடன் கூட்டமாக அண்ணன் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவையும் கோதபாய கவனிக்கத் தவறவில்லை. இவருக்கு முன்னைய இரண்டு அமைச்சுகளுடன் புதிதாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

அப்பா பிரதமர், பெரியப்பா சாமல் மூத்த அமைச்சர், முதலாவது சித்தப்பா கோதபாய ஜனாதிபதி, இரண்டாவது சித்தப்பா பசில் பத்து வீதம் எனப் புகழ் பெற்ற நிதி அமைச்சர், ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவர் ராஜாங்க அமைச்சர்கள். நாமலுக்கு மூன்று அமைச்சுகள். ராஜபக்சக்கள் காட்டில் தேன்மழை பொழிகிறது. 

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நான் எப்போதும் அவர்கள் நலனைக் கவனிப்பேன் என்று அடிக்கடி கூறிவரும் கோதபாய, அந்த மக்களின் வெறுப்புக்குரியவராக மாறியுள்ளார். இவர்களை ஆட்சிக் கதிரைக்குக் கொண்டு வந்து ஏற்றியதன் ஊடாக தாங்கள் பெரும் பாவம் செய்துவிட்டதாக பௌத்த பிக்குகள் பகிரங்கமாகக் கூறத்தொடங்கியுள்ளனர். 

மொத்தத்தில், தங்களைத் தெரிவு செய்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த தங்கள் மக்களின் நம்பிக்கையை ஒன்றரை வருடங்களுக்குள் இழந்த முதலாவது ஜனாதிபதியாக கோதபாய ராஜபக்ச காணப்படுகிறார். போதாக்குறைக்கு ஆட்சித் தரப்பின் பங்காளிகளான பத்துக் கட்சிகளும் இவரை அங்கீகரிப்பவர்களாகக் காணப்படவில்லை. இதற்கிடையில் இன்னொரு அமைச்சரவை மாற்றம் விரைவில் வரப்போவதாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் சசீந்திர அறிவிப்புக் கொடுத்துள்ளதால் அதனை நம்ப இடமிருக்கிறது. 

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சவேந்திர சில்வா - கமால் குணரட்ன ஆகிய போர்க்குற்றவாளிகளான ராணுவ அதிகாரிகளே கோதபாயவின் இடமும் வலமுமாக இருப்பார்கள். முள்ளிவாய்க்காலை கையாண்ட பாணியில் சிங்கள பௌத்தர்களைக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது. 

இந்த நிலைவரத்தில், இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார் கோதபாயவுக்கு. 

கடந்த மாதம் 16ம் திகதி தங்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடான கூட்டம் இறுதி நேரத்தில் ரத்தானதைச் சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறையை இனியும் தாமதிக்கலாகாது எனவும், இது தொடர்பாக உரையாடவும் நேரம் தருமாறு கடிதத்தில் கேட்டுள்ளார். 

இலங்கைக்கு பிரிட்டிசார் சுதந்திரம் என்ற பெயரில் ஒற்றை இன ஆட்சியை வழங்கியதன் பின்னர் இரண்டு புதிய அரசியலமைப்புகள் - 1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியிலும், 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியிலும் கொண்டு வரப்பட்டன. இதன் பின்னரான ஒவ்வொரு தேர்தல்களின்போதும் புதிய அரசியலமைப்பொன்று கொண்டு வரப்போவதாக சகல கட்சிகளும் அறிவித்து வந்தன. 

1972ல் சிறிமாவோ அரசு உருவாக்கிய புதிய அரசியலமைப்பை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், அப்போது எதிர்க்கட்சியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. 

1977 தேர்தலில்; ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமக்குக் கிடைத்த 83 வீதமான நாடாளுமன்ற பலத்துடன் 1978ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். அப்போது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் அதனை எதிர்த்திருந்தன. ஆக, மேற்குறிப்பிட்ட இரண்டு அரசியல் அமைப்புகளும் தமிழர் தரப்பால் மட்டுமன்றி, அப்போதிருந்த சிங்கள எதிர்க் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படாதவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். 

கடந்த 43 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த அனைத்துத் தரப்பினரும் ஜே.ஆரின் 1978 அரசியலமைப்பில் தங்களுக்குச் சாதகமான திருத்தங்களையே மேற்கொண்டுள்ளனர். 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கோதபாயவின் பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததையடுத்து, அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும்போது அவர் என்ன சொன்னார்? 

உடனடியாக பத்தொன்பதாவது அரசியல் திருத்தம் நீக்கப்பட்டு, ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்றார். அதேசமயம் இருபதாவது திருத்தமும் கொண்டு வரப்படும் என்பதற்கிணங்க கடந்தாண்டு அக்டோபரில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராவூப் ஹக்கீம் - றிசாட் பதியுதீன் கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவே மூன்றிலிரண்டை இதற்குப் பெற்றுக்கொடுத்தது. 

இதன் அடுத்த கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, ஜனாதிபதி சட்டத்தரணி றோமேஸ் டி சில்வா ஆகியோர் தலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைபைத் தயாரிக்கவென குழுவொன்றை கோதபாய நியமித்தார். பல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் குறிப்பிட்ட திகதிக்குள் தங்கள் ஆலோசனைகளை எழுத்தில் சமர்ப்பித்தன. பார்க்கும்போது எல்லாமே துரிதமாக நடைபெற்றதாயினும், அதன் பின்னர் எதுவுமே தொடரவில்லை. அது அப்படியே அமர்ந்துவிட்டது. 

கடந்த மார்ச் மாதம் கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்த விஜேதாச ராஜபக்ச, இந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பு இடம்பெறாது (ழே நெற உழளெவவைரவழைn னரசiபெ வாளை பழஎநசnஅநவெ) என்று தெரிவித்திருந்தது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. 

2015ல் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் கூட்டுத் தலைமையிலான அரசாங்கமும் புதிய அரசியலமைப்பை உருவாக்க உறுதியளித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும், தமிழரின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு நிச்சயம் வருமெனவும் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் கூறிவந்தது. இதற்கென உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக் குழுவில் கூட்டமைப்பின் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. இடம்பெற்றிருந்தார். 

புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழருக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தரவே தாம் எம்.பியாக இருப்பதாகவும், அது நிறைவேறியதும் தாம் அரசியலிலிருந்து விலகி விடுவதாகவும், இது நிறைவேறத் தவறினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து நீங்கி விடுவதாகவும் சுமந்திரன் சொல்லி வந்தார். 

புதிய அரசியலமைப்பு வரவில்லை. அவரும் பதவி விலகவில்லை. அதன் பின்னரான கடந்த வருடத் தேர்தலிலும் குறைந்த வாக்குகளால் வெற்றிபெற்று, தொடர்ந்து சிங்கள ஆட்சித் தரப்புக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான தரகராகவே இயங்கி வருகிறார். 

அடுத்த மாதம் ஜெனிவா நகர்வு ஆரம்பமாகிறது. இங்கு இலங்கை எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியைத் தணிப்பதற்கு ஏற்கனவே சுமந்திரனுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சு நடத்தினார். இதன் அடுத்த கட்டமாக வெளிவிவகார அமைச்சராக பீரிஸ் பதவியேற்றுள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக கோதபாயவை சந்திப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இதற்கான வாய்ப்பை தேவை கருதி கோதபாய வழங்கும் சாத்தியமுண்டு. 

அவ்வாறான சந்திப்பு இடம்பெறுமானால், பசில் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொள்வர் என நம்பலாம். சிலவேளை இந்தியத் தூதுவராகச் செல்லவிருக்கும் மிலிந்த மொறகொடவும் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு. 

புதிய அரசியலமைப்பு விரைவில் வரும்போது தமிழரின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் என்ற ஜெனிவாவுக்கு எடுத்துக் கூறுவதற்கு கூட்டமைப்பினருடனான சந்திப்பை ஜெனிவாவில் இலங்கை அரசு பயன்படுத்தும். கடந்த ஆட்சிக் காலத்தில் மைத்திரி - ரணில் அரசை ஜெனிவாவில் பிணையெடுத்த கூட்டமைப்பு இப்போதும் அதனையே செய்ய விரும்புகிறதா?

இதுவரை தூங்கிக் கிடந்த சம்பந்தனை துயிலெழுப்பி தமக்குத் துணையாக சுமந்திரன் இணைத்துச் செல்வது சிங்களத் தலைமைகளுக்கு எப்போதும்போல் வாய்ப்பாகி விடும். தேர்தல் கால தமிழ்த் தேசிய மாற்றுத் தலைமைகளும் மாற்று அணிகளும் என்ன செய்கிறார்கள்? 

No comments