ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் - தலிபான்கள் அறிவிப்பு


ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களையும், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு துணையாக இருந்தவர்களையும், நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களையும் அமெரிக்கா அப்புறப்படுத்தி வருகிறது.

அதேபோல், பல்வேறு நாடுகளும் தங்களின் மக்களை வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கா தனது மீட்புப் பணியை முடித்துவிட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.

ஆகஸ்ட் 31 என்பது மிகவும் குறுகிய காலக்கெடு. அதற்குள் அன்றாடம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூட காத்திருப்போரை மீட்க முடியாது என்று ஜெர்மனி அரசு தெரிவித்திருந்தது. காலக்கெடுவை நீட்டிக்க ஜி7 நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதனை ஜெர்மனி நாட்டு தூதர் மார்கஸ் போட்ஸெல் உருதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான், தலிபான்களின் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாயிடம் பேசினேன். அவர், உரிய ஆவணங்கள் உடைய ஆப்கன் மக்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட வர்த்தக விமானங்கள் மூலம் வெளியேற அனுமதிக்கிறோம் என்று உறுதியளித்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல், உலக நாடுகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஆப்கானிஸ்தானில் பல்வேறு நாடுகளும் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வந்தனர். அதனால், ஆப்கானின் உட்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் கணிசமான வளர்ச்சி கண்டது. இந்நிலையில், அந்த வளர்ச்சியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments