அவசர அனர்த்த நிலை:சுடலையிலும் இடமில்லையாம்!



இலங்கையை திறந்துவிட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று வேகம் உக்கிரமடைய இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மட்டக்களப்பு, ஓட்டமாவடி சூடுபத்தினசேனையிலுள்ள, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்  ஜனாஸாக்கள் மற்றும் சடலங்களை அடக்கம் செய்யும் இடுகாட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் 700 சடலங்களை மட்டுமே அடக்கம் செய்யமுடியும் என, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர், தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை பொது மயானத்திலே இந்த சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. 

சடலங்களை அடக்கம் செயவதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் அடக்கம் செய்துவந்த நிலையில், இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் அனைத்து சமூகத்தினரதும் உடல்கள் அடக்கம் செய்துவருகிறோம்.

இதுவரையில் 1,279 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 700 உடல்களை மட்டுமே  அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து கொண்டு வரப்படுவதன் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் இந்த இடம் முடிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


இந்த இடம் தொடர்பாக கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். 


நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேறு எங்கும் இடம் ஒழுங்கு செய்யப்படவில்லை. ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில், இது முடிவுறும் போது இங்கு மேலும் இடத்தை பெற்றுக்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது 


எனவே, மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நாட்டில் வாழுகின்ற எல்லோரினதும் பொதுவான பிரச்சனையாகும். எனவே இந்த இடம் முடிவடையும் போது, மாற்று இடத்தை எல்லோருமாக சேர்ந்து பெறவேண்டிய பொறுப்பு இருக்கின்றது என்று தெரிவித்தார். 

No comments