கொரோனா:சமூகப் பரவல் அடையவில்லை?இலங்கையில் கொரேனா அபாயம் குறித்து முன்னிண மருத்துவர் எழுதியுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

உண்மையில் ராஜபக்ச கும்பல் என்ன செய்கின்றதென்ற கேள்வியை எழுப்பியுளள பதிவு இது...

ஹிரோ ஒநாடா. இரண்டாம் உலகபோரில் ஜப்பான் படைவீரர். பிலிப்பைன்ஸில் ஒரு தீவை பிடிக்க சென்ற அவரது படையணியிடம் "பதுங்கி இருந்து ஊர் மக்கள் மேல் கொரில்லா தாக்குதல் நடத்துங்கள்" என உத்தரவு பிறப்பித்தார் அவரது கமாண்டர்.


அதன்பின் நடந்தபோரில் அவரது படையணி முழுக்க கொல்லப்பட, மூன்று வீரர்களுடன் காடுகளில் சென்று பதுங்கினார் ஒநாடா. போர் முற்றுப்பெற்றது. ஜப்பான் சரணடைந்தது. ஆனால் இந்த விவரம் எதுவும் அவருக்கு தெரியவில்லை.


1972 வரை 30 ஆண்டுகள் காடுகளில் பதுங்கி இருந்து ஊருக்குள் வந்து போலிஸ் ஸ்டேசன், அவ்வழியே செல்லும் கார்கள் மேல் தாக்குதல் நடத்துவது அவர்கள் வழக்கம். 1972க்குள் மீதமிருந்த மூவரும் கொல்லபட்டுவிட ஒநாடா மட்டுமே எஞ்சினார்.


"போர் முடிந்தது" என ஜப்பானிய மொழியில் எத்தனையோ துண்டுபிரசுரங்கள் வீசியும், ரேடியோவில் அறிவிப்பு கொடுத்தும் அவர் நம்பவே இல்லை. இது தன்னை பிடிக்க அமெரிக்கர்கள் செய்யும் சதி என்றே நினைத்தார்.


1972ல் ஒரு ஜப்பானிய கல்லூரி மாணவன் பிலிப்பைன்ஸ் கிளம்பிப்போய் காடுகளில் புகுந்து அலைந்து திரிந்து ஒநாடவை கண்டுபிடித்து "போர் முடிந்தது" என எத்தனை சொல்லியும் அவர் நம்பவில்லை. "என்னுடைய கமாண்டர் உத்தரவிட்டால் தான் நம்புவேன்" என்றார்.


அந்த மாணவர் அதன்பின் ஜப்பான் போய் அவரது பழைய கமாண்டரை தேடிப்பிடித்தார். அவர் ஒரு புத்தக கடை நடத்தி வந்தார். இருவரும் பிலிப்பைன்ஸ் கிளம்பிபோனார்கள். "போர் முடிந்தது. சரணடைந்துவிடு" என கமாண்டர் ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்தார்.


அதன்பின் கம்பீரமாக தன் ராணுவ உடையுடன், வாளுடன் சரணடைய வந்தார் ஒநாடா. அவரை காண பிலிப்பைன்ஸ் அதிபரே கிளம்பி வந்தார். வாளை பெற்றுக்கொண்டார். அதுவரை பலரை ஒநாடா கொன்றிருந்தும் அவரது வீரத்தை பாராட்டி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கபட்டது.


நியாண்டர் செல்வன் எழுதிய இந்த சம்பவத்தை படித்த போது ஏனோ தெரியவில்லை நமது அரசாங்கம் தான் ஞாபகம் வந்து தொலைத்தது.


தற்போதைய நிலவரப்படி, மேல் மாகாணம் மிக மோசமான கொரோனா சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது போல நாடு முழுக்க வைத்தியசாலைகளின் கொள் அளவையும் தாண்டி , இடைத்தங்கல் நிலையங்களும் நிரம்பி ஹோட்டல்களும் மெது மெதுவாக கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


இந்தியாவை புரட்டிப் போட்ட அதே டெல்டா பிரள்வு தான் இங்கும் மிக வீரியத்துடன் பரவுகிறது என்பது நிரூபணமாகி இருக்கிறது. பரிசோதனைகளுக்காக எடுக்கப்படும் மாதிரிகளில் அரைவாசிக்கு மேல் கொரோனா பொசிடிவ் வருகிறது என்பதாக வைத்தியர்கள் கவலைப்படுகிறார்கள். வைத்தியசாலைகளில் ஒக்ஸிஜன் தேவைப்பாடு என்றும் இல்லாத அளவு எகிறிக்கொண்டிருக்கிறது. நாட்டின் எப்பாகத்திலும் ஐஸியு கட்டில் ஒன்றை பெறுவதற்கு நாயாக, பேயாக அலைய வேண்டி இருக்கிறது. இது தான் நாட்டின் தற்போதைய நிலை.


எனது நட்பு வட்டத்தில் உள்ள வைத்தியர்கள் எல்லோரும் பயந்து போய் இருப்பதாக சொல்கிறார்கள். பாரிய அழிவு ஒன்றுக்கு முன்னால் கையாலாகாதவர்களாக தாங்கள் மாறி இருக்கிறோமே என்று அங்கலாய்க்கிறார்கள். சிலர் இதை கொரோனா அலை என்பதை விட "கொரோனா சுனாமி" அல்லது "டெல்டா சுனாமி" என்பது தான் சரி என்பதாக வாதாடுகிறார்கள். இனி சாண் என்ன முழம் என்ன தலைக்கு மேல் வெள்ளம் என்பது தான் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் சாரம்.


இறாகமை வைத்தியசாலை , களுபோவில வைத்தியசாலைகளின் நிலைமை குறித்த வீடியோக்கள் கூட தற்போது சமூகப் பரவல் அடைந்துவிட்ட இந்நிலையில், இந்த கோரோனா மட்டும் இன்னமும் சமூகப்பரவல் அடையவில்லை என்பதாக அரசாங்கம் நம்பிக்கொண்டிருக்கின்றது. ஒநாடா போலவே இந்த நம்பிக்கை எப்போது மாறும் என்பது இன்னும் தெரியவில்லை. சிலவேளை கமாண்டர்கள் சொன்னால் மாறலாம்.


காட்டுத்தீயாய் பரவி வரும் டெல்டா பேரலை நமது வாசல்படிகளையும் வந்தடையாது என்பதற்கு இனி எந்த உத்தரவாதமும் நம்மிடம் இல்லை. வக்சீன் போட்டிருக்கிறேன், மாஸ்க் அணிந்திருக்கிறேன் என்று வெளியில் சுற்றித்திரிந்தால், அதிஷ்டம் இருந்தால் கோரோனா தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நிலமை அவ்வளவு மோசம். இந்த காலகட்டத்தில் ஊரை விட்டு வெளியில் போய் வருபவரை விட ஊரில் இருப்பவரே பாதுகாப்பானவர். ஊரில் வீதிகளில் சுற்றித் திரிபவரை விட வீட்டில் இருப்பவரே பாதுகாப்பானவர். வீட்டில் குடும்பத்தோடு இருப்பவரை வீட்டில் தனிமையில் இருப்பவரே பாதுகாப்பானவர். தனிமையில் வீட்டில் இருப்பவரை விட, தனிமையில் காட்டில்

இருப்பவரே பாதுகாப்பானவர்.


No comments