கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது!!


குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தேசிய குற்ற முகமை தலைமையிலான பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் பங்கேற்று இருக்கின்றனர்.

கிரீஸின் Lefkada தீவிலிருந்து இத்தாலிக்கு 14 குடியேறிகளுடன் சென்ற அதிவேக படகு இடைமறிக்கப்பட்ட நடவடிக்கையின் போது, குடியேறிகளை விட்டுவிட்டு தப்ப முயன்ற படகு ஓட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரொக்கமாக பணம், அலைப்பேசிகள், போலியான பயண ஆவணங்கள் மற்றும் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 7 பேர்களில் மூவர் ஈராக்கியர்கள், இருவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், இருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் துருக்கியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“துருக்கியிலிருந்து கிரீஸ் வழியாக சட்டவிரோதமாக ஐக்கிய இராச்சியத்திற்கு குடியேறிகள் சிலர் கடத்தப்படுவதில் எந்த சந்தேகமுமில்லை. இவ்வாறான திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இரக்கமற்றவர்கள், மக்களை லாபம் சம்பாதிப்பதற்கான விற்பனைப் பொருளாக பார்க்கக் கூடியவர்கள்,” என தெரிவித்திருக்கிறார் குற்ற முகமையின் பிராந்தியத் தலைவர் டேவ் ஹக்கர். 

No comments