பிளவுக்குள் பலியாகிறது தமிழ்த் தேசியம்! பனங்காட்டான்


ஒன்று கூடுவது ஆரம்பம்! சேர்ந்தியங்குவது முன்னேற்றம்! ஒன்றிப் பயணிப்பது வெற்றி!

வேகம் கொண்டிருக்கும் கொரோனாவை சாதகப்படுத்தி தங்களின் இலக்கான ஜனநாயக சோசலிச(?) ராணுவ முடியாட்சியை கோதபாய தலைமை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்குப் பக்கபலமாக உள்ளும் புறமும் சீனதேசம் உடந்தையாக உதவி புரிகிறது. வெளிப்படையாக சீன ராணுவ சீருடையுடன் தீவின் பல பாகங்களிலும் பன்முக வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இப்போதுள்ள போக்கில் அடுத்த பொதுத்தேர்தல்வரை கொரோனா நெருக்கடியை நீடித்து மற்றைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும் தொழிற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதே ஆட்சித் தரப்பின் திட்டம். அதற்கேற்றாற்போல சகல எதிர்க்கட்சிகளும் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. 

ராஜபக்ச குடும்பத்தின் அடுத்தடுத்த வாரிசுகளை (பசில், நாமல்) முன்னிலைப்படுத்தி பதவிகளும் ஆசனங்களும் மாளிகைகளும் உருவாக்கப்படுகின்றன. பொதுஜன பெரமுனவை பதவிக்குக் கொண்டு வந்த குட்டிக் கட்சிகளும் பௌத்த தேரர்களும் முடக்க நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

இந்த அரசியல் சீத்துவக்கேட்டில் தமிழர் தரப்பு தனக்குள் மோதுப்பட்டு தங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. தற்போது தமிழர் தரப்புக்கான தேசிய வழிகாட்டல் என்பது கூட்டா அல்லது தனித்தா அல்லது எதுவுமே இல்லாததா என்பது ஐயப்பாட்டில் உள்ளது. 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ம்திகதி நடைபெற்ற 16வது பொதுத்தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மாற்றுத் தலைமை, மாற்று அணி என்பவை இந்தத் தேர்தலின் அடிநாதமாக இருந்தன. 2001ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை இடம்பெற்ற நான்கு பொதுத்தேர்தல்களில் கூட்டமைப்பு என்ற ஒற்றைத் தலைமைக்கு வாக்களித்த மக்கள், 2020 வரையான இருபது ஆண்டுகளை இரு தசாப்தங்களாக பிரித்துப் பார்க்கிறார்கள். 

தமிழர் தாயகம் என்ற தேசியக் கொள்கைக்கு 2004ம் ஆண்டுத் தேர்தலிலேயே அதியுச்சமாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். விடுதலைப் புலிகளின் பின்னணியே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. 2009 முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குப் பின்னர் இதில் மாற்றம் ஏற்பட்டது. 2010 தேர்தல் கூட்டமைப்புக்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 2015ம் ஆண்டுத் தேர்தல் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்து சரிவு நிலையைக் காட்டியது. 

2015ல் பதவிக்கு வந்த மைத்திரிபால - ரணில் தலைமையிலான அரசுடன் கூட்டமைப்பு தேநிலவுக்குப் போனதால் ஏற்பட்ட அதிருப்தியை கடந்த வருட தேர்தல் முடிவு காட்டியது. கூட்டமைப்புக்கு இத்தேர்தலில் பத்து ஆசனங்களே கிடைத்தன. 

2004 தேர்தலில் வடக்கில் பதின்மூன்று ஆசனங்களையும், கிழக்கில் ஏழு ஆசனங்களையும் பெற்ற கூட்டமைப்பு, கடந்த வருடத் தேர்தலில் வடக்கில் ஆறு ஆசனங்களையும் கிழக்கில் நான்கு ஆசனங்களையும் மட்டுமே பெறும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்பதற்கு பிரேத பரிசோதனை தேவையில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை இது. 

வயோதிபர் விடுதிக்குச் செல்ல வேண்டிய தலைமைகள், வெளியிலிருந்து எவ்வாறோ உள்ளே தள்ளப்பட்ட கறுத்த ஆடுகள், கட்டுக்கோப்பை உடைத்து சிங்களத்துக்குச் சாமரை வீசப் புறப்பட்ட கருங்காலிகள் என்று கூட்டமைப்பின் பின்னடைவுக்கு பல காரணங்கள் கூறப்படுவதுண்டு. 

வீட்டுக்குள் சலிப்படைந்து வெளிவந்த வாக்காளர்களும், புதிய இளம் வாக்காளர்களும் ஒரு மாற்றத்தை விரும்பினர். இதனை, மாற்று அணியா - மாற்றுத் தலைமையா என்று நோக்காது, பழையன கழிக என்று இவர்கள் கருதினர். இதனால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய முன்னணி இரண்டு இடங்களையும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற முடிந்தது. இது இரு தசாப்தங்களினதும் ஒரு வரலாற்றுப் பதிவு. 

இப்போது, தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மொத்தம் பதின்மூன்று பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இவர்களுக்கு எதிரணியாக ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவும் மற்றும் திலீபனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையான் எனப்படும் சிவனேஸ்வரனும், பொதுஜன பெரமுனவின் வியாளேந்திரனுமாக ஐவர் வடக்கு கிழக்கிலிருந்து தெரிவாகியுள்ளனர். இவர்கள் ஐவரும் அரசாங்கத்தில் ஏதோவொரு பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கான பதின்மூன்றாவது அரசியல் திருத்தம், புதிய அரசியலமைப்பு, தமிழர் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றம், போர்க்குற்ற பொறுப்புக்கூறலும் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையும், இலங்கை மீதான ஜெனிவாத் தீர்மானம், ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம், அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை என்பவற்றை தமிழ் மக்கள் இப்போது சுர்மையாகப் பார்க்கின்றனர். 

இவ்விடயங்கள் தொடர்பாக தமிழர் தரப்பில் எந்தத் தலைமையுடன் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் - சர்வதேச ரீதியாகவும் பேச்சு நடத்த வேண்டுமென்ற கேள்வி கடந்த சில வாரங்களாக முனைப்புப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒரே வார்த்தையில் கூறுவதானால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேச்சு நடத்துவது முறையா? அதற்கான தகுதியை கூட்டமைப்பு தக்க வைத்துள்ளதா என்ற வினாக்களே இன்று எழும்பியுள்ளது. 

இங்கிலாந்திலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடை தமிழ் வானொலியின் கடந்த வார அரசியற் களம் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. தமிழ்த் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் தெரிவான பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூன்று கட்சிகளையும் சேர்த்தே எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெற வேண்டுமென்ற கருத்து இக்களத்தில் வலியுறுத்தப்பட்டது, 

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு தினசரியின் கடந்த யூன் 30, யூலை 1ம் திகதிய பதிப்புகளின் ஷஇப்படியும் நடக்கிறது| என்னும் பத்தியில் இதே விடயம் முக்கியமாக எடுத்தாளப்பட்டது. ஷதமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பின்னரும் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் போல தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் தரப்பில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்...| என்பது இப்பத்தியை எழுதும் ஊர்க்குருவியின் கருத்து. 

இக்கருத்துடன் பனங்காட்டான் கருத்தும் ஒத்துப் போவதால் இதனையே இங்கு சற்று ஆழமாகப் பார்க்க நேர்கிறது. 

2001, 2004, 2010, 2015 தேர்தல்களில் தமிழர் தாயக மக்கள் கூட்டமைப்புக்கே தங்கள் வாக்கை அள்ளிப் போட்டு தமிழர் தரப்பின் கூடிய எம்.பி.க்களை நாடாளுமன்றம் அனுப்பினர். அவ்வேளையில் கூட்டமைப்பினர் தங்களைத் தாங்களே தமிழரின்; ஏகப்பிரதிநிதிகள் என அழைத்தனர். 

ஆனால், 2020 தேர்தல் முடிவு முன்னர்போல அமையவில்லை. கஜேந்திரகுமார் முன்னணிக்கும், விக்னேஸ்வரன் கூட்டணிக்கும் ஆசனங்கள் கிடைத்ததால் கூட்டமைப்பு தொடர்ந்து தனித்தலைமை, ஏகத்தலைமை என்று கூறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  

மறுதரப்பில் கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது ஆணித்தரமாக உரைகளை நிகழ்த்துவதாலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாணியில் விக்னேஸ்வரன் கேள்வி - பதிலை எழுத்தில் வடிப்பதாலும் மாற்றுத் தலைமைக்கு வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதையும் கவனிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஜனாதிபதி என்ற கோதாவில் அண்மையில் கோதபாய ராஜபக்ச கூட்டமைப்பினரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், பின்னர் அது ரத்தானது (ராணுவ ஆட்சி என்றால் இப்படித்தான்). அதேசமயத்தில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவருடன் சுமந்திரனும் இதில் கலந்து கொண்டார். வழமையான பதின்மூன்றாவது திருத்த அமலாக்கம் தொடர்பாக இந்தியா உறுதியளித்ததாக செய்திகள் வந்தன. 

தமிழர் தரப்பு ஒற்றுமையாக ஒன்றுபட்டு ஒரே குரலில் இயங்க வேண்டுமென்று இந்தியத் தூதுவர் கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ஒரு தகவல். இதனை நம்பி ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எடுத்த முயற்சியை மாவை. சேனாதிராஜாவும் சுமந்திரனும் திட்டமிட்டு இல்லாமலாக்கியதாக இன்னொரு தகவல்.

எதுவானானும், இங்கு கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை விடயம், கூட்டமைப்பு - கஜேந்திரகுமாரின் முன்னணி - விக்னேஸ்வரனின் கூட்டணி ஆகிய மூன்றும் தமிழ் மக்களின் அடிப்படை விடயங்களில் ஒரே குரலில் இயங்க வேண்டியது அவசியமாகிறது என்பதாகும். தமிழர் தரப்பை ஒரே குரலில் பேசுங்கள் என்று அறிவுரை கூறும் இந்தியத் தரப்பு, பேச்சுவார்த்தை என்று வரும்போது கூட்டமைப்பை மட்டும் அழைத்துவிட்டு ஒற்றுமை பற்றிப் பேசுவதில் என்ன நியாயம்?

சிங்கள ஆட்சித் தரப்பினரும், தமிழரின் அரசியல் அபிலாசைகள் மற்றும் நாளாந்த விவகாரங்கள் பற்றி உரையாட கூட்டமைப்பை மட்டும் தனித்து அழைக்காமல் தமிழ்த் தேசியம் சார்ந்த பதின்மூன்று எம்.பிக்கள் தரப்பினரையும் அழைக்க விரும்பாதது ஏன்? (கூட்டமைப்பை இலகுவாக கைப்பிள்ளையாக்கி விடலாமென்ற நம்பிக்கையா?)

தாங்கள் இப்போது தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லையென்பதை கூட்;டமைப்பினரும் உணர வேண்டும். எனவே, தமிழர் தரப்புடன் பேசவென தங்களை எவர் அழைத்தாலும், கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் அணியையும் சேர்ந்து அழைக்குமாறு இவர்கள் வலியுறுத்த வேண்டும். 

கூட்டமைப்பு எனும் ஒரேயொரு தரப்பினருடன்தான் பேசுவோம் என சிங்கள அரசாங்கமோ அல்லது இந்தியத் தரப்போ கூறுமானால், அது தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மையை விரும்புகிறார்கள் என்றும், தமிழர் தரப்பை பிளவுபடுத்தவே முயற்சிக்கிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. கூட்டமைப்பினரும் தங்களை மட்டும்தான் பேச்சுக்கு அழைக்க வேண்டுமென்ற ஏகத்தலைமைக் கனவை அகற்ற வேண்டும். 

ஜெனிவாவுக்கு முதற்கடிதம் அனுப்பும்போதும், காணாமலாக்கப்பட்டவர்கள் விடயமாக அரசுடன் பேசும்போதும் பொதுப்பிரச்சனை அடிப்படையில் இணைந்த முத்தரப்பினராலும், தொடரும் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஏன் இணைந்து செயற்பட முடியாது?

ஒன்று கூடுவது ஆரம்பம்!
சேர்ந்தியங்குவது முன்னேற்றம்!
ஒன்றிப் பயணிப்பது வெற்றி!

No comments