பிரான்சில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்!!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2021 திங்கட்கிழமை பொபினிப் பகுதியில் மாலை 16.00 மணிக்கு மிகவும் எழுச்சி உணர்வோடும் கொரோனா தொற்று விதிமுறையின் கீழும் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருகிணைப்புக்குழு மாவீரர் பணிமனை செயற்பாட்டாளர் திரு.கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார்.

கரும்புலிகள் பொது உருவப்படம், கரும்புலி கப்டன் மில்லர், கடற்கரும்புலி கப்டன் அங்கயர்க்கண்ணி உள்ளிட்ட தற்கொடையாளர்களின் திருஉருவப் படங்களிற்கான ஈகைச் சுடர்களை, 1998 இல் கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கலையொளி, 02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த 2-ம் லெப். காண்டீபன், 20.06.1990 அன்று காரைநகரில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை ரவி அவர்களின் சகோதரி,

24.08.2008 அன்று யாழ்.முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை மயூரன்,03.11.1990 அன்று மாவிட்டபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பவித்ரா, 20.06.1999 அன்று யாழ்.கொக்குவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் ஆகிய மாவீரர்களின் சகோதர சகோதரிகள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; அணிவகுத்து சுடர்வணக்கம், மலர் வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக கரும்புலி மறவர்களின் நினைவுசுமந்த கவிதை, பேச்சு, லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை, பொண்டி தமிழ்ச்சோலை, செவ்ரோன் தமிழ்ச்சோலை, புளோமெனில் தமிழ்ச் சோலை, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மற்றும் ஆதிபராசக்தி நாட்டியப் பள்ளி மாணவிகளின் தமிழீழ எழுச்சிப்பாடலுக்கான நடனங்களும் சிறப்பாக இடம்பெற்றன.

நிகழ்வில் சிறப்பு விடயமாக, பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர். தமிழீழ இசைக்குழுவினை அறிமுகம் செய்திருந்தமை கரும்புலிகள் நாளை மேலும் உணர்வடைய வைத்ததுடன், குறித்த தமிழீழ இசைக்குழுவின் கலைஞர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உரையாற்றிய பரப்புரைப்; பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் கரும்புலிகளின் நினைவாக இளையதலைமுறையினரின் ஆற்றுகைகள் புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ள இந்தவேளையில், பிரான்சில் எதிர்வரும் 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படவுள்ள மேதகு திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய கடப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.

தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிகானங்கள் நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தன.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உணர்ச்சி மந்திரத்தோடு நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.


No comments