அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பொதுத்தேர்வு - யேர்மனி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது.

பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு இன்று 12.06.2021 பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.

ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இத் தேர்வில் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு யேர்மனியில் 90 நிலையங்களில் நடைபெற்றது. தேர்வை மேற்பார்வை செய்வதற்கு 850க்கு மேற்பட்ட முன்னிலை மேற்பார்வையாளர்கள் பணியாற்றினார்கள். மழலையர்நிலை மற்றும் சிறுவர்நிலை ஆகிய இரு வகுப்புகளில் பயிலும் 800க்கு மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

நிறைவுபெறும் இக் கல்வியாண்டு முழுவதும் கோவிட்- 19 (ஊழுஏஐனு-19) நோய்த்தொற்று கரணியமாகத் தமிழாலயங்கள் மூடப்பட்டு இருந்த நிலையிலும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அயராத உழைப்பினால் கற்பித்தல் முயற்சிகள் தொடர்ந்தும் இயங்குநிலையை இழக்காத கரணியத்தால் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் தங்கள் மொழித்திறனை மீண்டும் வலுவேற்றியுள்ளனர்.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் சென்ற வாரம் சிறப்பாக வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பாவனையில் இருந்துவந்த பாடநூல்கள் எதிர்காலத்தில் தமிழ் பயிலும் பிள்ளைகளின் வளநலன் கருதி மேம்படுத்தப்பட்டுள்ளன. அப்பாடநூல்கள் தேர்வு நிறைவுபெற்ற பின்னர் மாணவர்களுக்கு இன்று வழங்கப்படுகின்றன. தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் எதிர்வரும் வாரங்களில் புள்ளிகள் வழங்கி தரம் கணிக்கப்பட்டபின்னர், ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கான தகுதிநிலைச் சான்றிதழ்; அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்படும்.

கடந்த பல மாதங்களாக நோய்த்தொற்று கரணியமாகத் தமிழாலயங்கள் இயல்புநிலையை இழந்தபோதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கட்டமைப்பும், கல்வி கற்பித்தல் ஒழுங்குகளும் சிறப்பாகப் பேணப்பட்டு வருவதற்காகக் கரம்கோர்த்துப் பயணித்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நடுவச் செயலகத்திலிருந்து இவ் இனிய தருணத்தில் எங்களுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments