தேசிய இனங்களை குறிவைக்கும் The family man: சீமான் காட்டம்!

 


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் The family man 2 பாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிிித்துள்ளார்.

“தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் the family man 2 இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும், அனைத்துலக நாடுகளும் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் கூக்குரலிட்டுப் போராடிக்கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச் செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும். இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச் சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.

முதல் பாகத்தில் இசுலாமியர்களையும், இரண்டாவது பாகத்தில் இப்போது தமிழர்களையும், மூன்றாவது பாகத்தில் வங்காளிகளையும் எனத் தொடர்ச்சியாக தேசிய இனங்கள் மீதும், இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களைக் காட்சிகளாக உருவாக்கி, வரலாற்றுத் திரிபுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வரும், ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்யவும், நிறுத்தவும் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.

இத்தகைய இணையத்தொடருக்குத் தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக் கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சகச்செயல் அப்பட்டமான தமிழர் விரோதப்போக்காகும்.

இத்தொடரைத் தடை செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும்  களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் இத்தொடர் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments