இலங்கையில் முடக்க நிலை நீடிப்பு!



கொரோனா தொற்று இலங்கையில் எதிர்பார்த்தது போன்று கட்டுப்பாட்டினுள் இல்லாத நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மாத இறுதி வரை தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தொற்று நிலைமை குறைவடையும் வரையில் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டாம் என்றே கூறி வருகின்றனர்.

இதன்படி மே 21 ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதனை மேலும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்படி இந்த விடயம் தொடர்பாக இன்று அல்லது நாளைய தினத்தில் கொவிட் தடுப்பு செயலணி கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது.

ஜுன் 21 ஆம் திகதி வரையில் கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன் நிலைமையை ஆராய்ந்து அதன் பின்னர் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக அறிவிக்கப்படும்.

முன்னதாக நாட்டில் தற்போது அமுலில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து அந்த சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை ஆராயும் போது கடந்த காலங்களை விடவும் 12 வீதத்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் மரண வீதம் 28 ஆக உயர்வடைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் வைத்தியசாலைகளில் நாளுக்கு நாள் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் இது மேலும் அதிகரித்தால் வைத்தியசாலைகளால் அதற்கு ஈடு கொடுக்க முடியாது போகலாம் என்றும் இதனால் நாட்டில் தற்போது அமுலில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது


No comments