அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்!!


ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல்நாசர் ஹெமட்டி, ஈரான் புரட்சிப் பாதுகாப்பு படை முன்னாள் தலைவர் மோசன் ரெசாய் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர்.

ஓட்டுப் பதிவு துவக்கம் முதலே மந்தமாக இருந்தது. சில இடங்களில் கடைசி நேரத்தில் ஓட்டு போட அதிகமானோர் கூடினர். அதனால் ஓட்டு பதிவு நேரம், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஈரான் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் ஓட்டுப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.ஓட்டுப் பதிவு முடிந்ததை அடுத்து, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

துவக்கத்தில் இருந்தே, இப்ராஹிம் ரைசியின் கை ஓங்கியிருந்தது. ஓட்டு எண்ணிக்கையின் இடையே அவர், 1.78 கோடி ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேசான் ரெசாய்க்கு, 33 லட்சம் ஓட்டுகளும், அப்துல்நாசர் ஹெமட்டிக்கு, 24 லட்சம் ஓட்டுகளும் கிடைத்தன. அதனால் இப்ரஹிம் ரைசியின் வெற்றி உறுதியாகிஉள்ளது.

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கோமேனியின் நம்பிக்கைக்குஉரியவர் இப்ராஹிம் ரைசி. இவர், 1988ல் அரசுக்கு எதிரான புரட்சியின் போது, அரசியல் கைதிகள் ஏராளமானோருக்கு மரண தண்டனை வழங்கியவர். அதனால் அமெரிக்கா, இவரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஒருவர், ஈரான் அதிபராவது இதுவே முதன் முறை. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல சவால்கள், இப்ராஹிம் ரைசிக்கு காத்திருக்கின்றன.

No comments