குருந்தூர் மலை இனி இல்லை!சர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும்  தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.


இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை  முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. தொல்பொருள் திணைக்கள  பணிப்பாளர் நாயகத்தின்  அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில்  தொல்பொருள் துறை  புராதன  ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில் குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்   பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த ஒருமாதகாலமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்த பட்டுள்ள நிலையில் கடந்தமாதம் நூறுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூசைவழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.

ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல்லு நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலை புராதன விகாரையின்  பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளை கொண்ட நிலப்பரப்பை கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் பிரதேச தமிழ்  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


குருந்தூர் மலையை சூழவும் தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments