இனி கொழும்பில்லை: தமிழீழ உயர் மறைமாவட்டம் உருவாகும்!

 


சிங்கள கத்தோலிக்க  ஆயர்கள் தமிழ் மக்களை கண்டுகொள்ளாத நிலையில் புதியதொரு பரிணாமமாக தமிழ் மறைமாவட்டங்கள் நான்கையும் ஒன்றிணைத்து ஆழமாகப் பணியாற்ற  வட கிழக்கு ஆயர் மன்றம் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் நான்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களையும்  குருமுதல்வர்களையும் உள்ளடங்கியது

வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் என்பது யாழ்ப்பாணம் திருகோணமலை மன்னார் மட்டக்களப்பு ஆகிய தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்களையும்  அதே மறைமாவட்டங்களின் குருமுதல்வர்களும் உள்ளடங்கியதான மன்றமாகும். இது கடந்த மூன்று ஆண்டுகளாக இது இயங்கி வருகின்றது.

வட கிழக்கு ஆயர் மன்றமானது முதலில் 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திலும் பின்னர் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலுமாக இரண்டு தடவைகள்  நேரடியாகச் சந்தித்துள்ளது. 

இம்மன்றமானது காலத்தின் தேவை கருதி அண்மையில் இரண்டு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.  இவற்றில் ஒன்று 18 மே 2021 செவ்வாய்க்கிழமை நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றியும் மற்றது உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக 24 ஒக்ரோபர் 2020 சனிக்கிழமை தினத்தை செபநாளாகக் கடைப்பிடிப்பது பற்றியும் அமைந்திருந்தது.

வட கிழக்கு ஆயர் மன்றத்தின்  நோக்கம் இலங்கையிலுள்ள நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் பணிவாழ்வை ஒன்றிணைத்து இலங்கைத் தமிழ்த் திரு அவைக்கும் புலம்பெயர்வாழ் தமிழ்த் திரு அவைக்கும் ஆழமான விதத்தில் பணியாற்றும் ஒரு தளத்தை ஏற்படுத்துவதாகும்.

வடக்கு கிழக்கு ஆயர் மனறத்தில் ஆராயப்பட்ட பல செயற்பாடுகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

தமிழ் பேசும் மக்களின் விடுதலை வாழ்வு பிரச்சனைகள் போன்றவற்றில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தல் மற்றும்   பல்மொழி பல்மத பல்இன மக்கள் வாழுகின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசத்திலுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் , சமூகப் பிரச்சனைகளின்போது ஒன்றிணைந்து தீர்வு காணல் என்பவற்றையும் தனது செயற்பாடுகளில் உள்ளடக்கியிருப்பதுடன் இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை ஒட்டுமொத்த இலங்கைத் திருஅவை மட்டில் தனது அவதானத்தைச் செலுத்துகின்றபோது இலங்கையின் தமிழ்த் திருஅவை சில விடயங்களில் புறக்கணிக்கப் படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதால் இக்குறையை இந்த வடக்கு கிழக்கு ஆயர் மனறம் தீர்த்துவைப்பதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இலங்கையில் தனியாக உத்தியோக பூர்வமாக ஒரு தமிழ் ஆயர் பேரவை வத்திக்கானிலுள்ள திருஅவையின் தலைமைப் பீடத்தினால் அங்கீகரிக்கப்படவும் அதன் அடிப்படையில் ஒரு தமிழ் உயர் மறைமாவட்டம் ஒன்று உருவாகவும் ஒரு தமிழ் ஆயர் பேராயராக உயர்த்தப்படவும் வழிவகுக்கும் ஒரு தளமாகவும் இந்த வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் செயற்பாடுகள் அமையும் என்பதும் அனைவரது  நம்பிக்கையாகும்.


No comments