சாவோடு ஒரு விளையாட்டு: தெல்லிப்பழை கதை!தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மில்லியன்

கணக்கில் மோசடி செய்த கதிரியல் தொழில் நுட்பவியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனராம்.

நிர்வாக நடைமுறைகளை மீறி, குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் புறந்தள்ளி கதிரியல் தொழில் நுட்பவியலாளர்கள் மேற் கொள்ளும் அராஜகத்தால் அவலமுறும் அப்பாவி யாழ் புற்று நோயாளர்கள் மரணித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.


கடந்த வருடத்தில் இருந்து கதிரியல் தொழில் நுட்பவியலாளர்கள் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடு இப்போது உச்சம் பெற்றுள்ளது.


மேற்படி வைத்தியசாலையில் 8 கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இவர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் மருத்துவ நிபுணர் தரப்பிற்கும் இவர்களுக்கும் இடையே ஆரம்பித்த முரண்பாடே இப்போது வலுப்பெற்று ஏற்கனவே புற்றுநோயால் வாடும் நோயாளர்களை மேலும் அவலத்திற்கு உட்படுத்தியுள்ளது .


இவர்களுடைய சாதாரண கடமை நேரம் காலை 8.000 தொடக்கம் மாலை 4.00 வரை. மாலை 4.00 மணிக்கு பின் கடமையாற்றும் போது புற்று நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு மருந்தாக்க அளவிற்கும் மேலதிக கொடுப்பனவாக ருபா 22.50 வழங்கப்படும். இதில் கநைடன என்பது நோயாளருக்கு வழங்கப்படும் கதிரியக்க அளவு ஆகும்.


இவர்கள் தினமும் இரவு நேரம் வரை கடமையாற்றியதாக குறிப்பிட்டு அதற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை ஆரம்பத்தில் பெற்று வந்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்நேரம் வரை இவர்கள் கடமையாற்றியதில்லை.


இதனை அறிந்த நிர்வாகம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த முறையற்ற செயற்பாட்டை அனுமதிக்கவில்லை.


இதன் பின்னரே பிரச்சனை ஆரம்பித்தது.தங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்காமையால் தாங்கள் மாலை நான்கு மணி வரையே கடமையாற்ற முடியும் எனவும் அதனால் ஒரு நாளைக்கு 24 நோயாளர்களுக்கு மட்டுமே கதிரியக்க சிகிச்சைகளை வழங்க முடியுமெனவும் தெரிவித்து அதற்கு மேலதிகமான நோயாளர்களை திருப்பியனுப்ப ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை 30 நோயாளர்களுக்கு கதிரியக்கம் வழங்கலாம் என்பது பொதுவான கருத்து.


முன்னர் தாங்கள் சரியாகவே கடமையாற்றி மேலதிக கொடுப்பனவை பெற்றதாகவும் வேண்டுமானால் கணக்காய்வு திணைக்களம் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.


இதனையடுத்து இவ்விடயத்தில் தலையிட்ட வட மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் இவர்களது கடந்தகால மேலதிக கொடுப்பனவுகள் பற்றி விசாரணைகளை ஆரம்பித்தனர்.


புற்று நோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சையை அளிக்கும் இயந்திரத்திர நினைவகத்தில் கடந்த காலத்தில் கதிரியக்க சிகிச்சை வழங்கப்பட்ட நேரம் , வழங்கப்பட்ட கநைடன (னுழளந) என்பன சேமிக்கப்பட்டிருக்கும்.


இதனை பிரதியெடுத்த கணக்காய்வு திணைக்கள உத்தியோகத்தர்கள் , கதிரியக்கவியலாளர்கள் பெற்ற மேலதிக கொடுப்பனவுடன் அவற்றை ஒப்பிட்ட போதே இது நாள் வரை இவர்கள் முறையற்ற விதத்தில் மேலதிக கொடுப்பனவை பெற்றமை தெரியவந்தது.


அதாவது சாதாரண கடமை நேரம் முடிவடைந்த பின் சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி இதுவரை ருபா 35 இலட்சம் வரை மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்த போதும் இயந்திரத்தில் அதற்கான பதிவுகள் எவையும் காணப்படவில்லை. இது மோசடி என தீர்மானித்த கணக்காய்வு திணைக்களம் குறிப்பிட்ட தொகையை கதிரியக்கவியலாளர்களிடமிருந்து மீளப் பெற வேண்டுமென மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு பரிந்துரை செய்தது.


அதன் பிரகாரம் இதுவரை ஒருபுகுதியே வரை மீளப் பெறப்பட்டுள்ளது. மிகுதி நிலுவையில் உள்ளது. இதன் மூலமே இவர்கள் மோசடியாகவே மேலதிக கொடுப்பனவை பெற்றமை தெளிவாகின்றது. ஆகவே முறையற்ற மேலதிக கொடுப்பனவை அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கோ வைத்திய நிபுணர்களுக்கோ அழுத்தம் கொடுக்க முடியாது. இவர்கள் உண்மையாகவே மாலை 4.00 மணிக்கு பின்னும் கடமையாற்றி இருந்தால் அதற்கான பதிவுகள் கதிரியக்க இயந்திரத்தில் இருந்திருக்கும்.


இது இவ்வாறு இருக்க தற்போது தமது தொழிற் சங்கம் மூலம் புதிய குண்டை போட்டுள்ளனர் . அதாவது இனிவரும் காலங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை 10 நோயாளர்களுக்கு மாத்திரமே தங்களால் சிகிச்சை வழங்க முடியும் என அவர்களது தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.


இவர்களது தொழிற்சங்கம் என்ன அடிப்படையில் இவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பியது ? அப்படியானால் மகரகம, அனுராதபுரம் போன்ற வைத்திய சாலைகளிலும் காலை 8.00 ல் இருந்து மாலை 4.00 வரை 10 புற்று நோயாளர்களுக்கு மாத்திரமே கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுகின்றதா ? இல்லையே ?


வழமையாக சுகாதார தொழிற் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் போது புற்று நோய் வைத்திய சாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவுகளிலும் அதனை மேற் கொள்வதில்லை. இவர்களோ கடிதம் அனுப்பி புற்று நோயாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர்.


இவர்களது தொழிற்சங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தொழிற் சங்க பதிவிலக்கமே இல்லை. இவர்களது தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதா என்பதே சந்தேகமாக உள்ளது.(கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)


ஏற்கனவே ஒருநாளைக்கு 25 பேருக்கு மட்டுமே கதிரியக்க சிகிச்சை வழங்குவோம் என தெரிவித்தமையால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அனேக புற்று நோயாளர்கள் அனுராதபுரத்திற்கும் மகரகமவிற்கும் திருப்பி அனுப்ப பட்டு கொண்டிருக்கும் வேளையில் இனி வரும் காலங்களில் நாளொன்றுக்கு 10 பேருக்கு மட்டும் சிகிச்சை வழங்குவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும்.


புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனமடைந்து இருப்பர். இங்கே சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் இருக்கையில் அவர்களை அனுராதபுரத்திற்கோ மகரகமவிற்கோ சென்று சிகிச்சை பெறுமாறு கோருதல் எவ்வளவு கொடுமையானது ? இவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் தாங்கி கொள்வார்களா ?


சென்ற வருடம் இவர்களது தொழிற்சங்க நடவடிக்கையால் அனுராதபுரம் சென்று சிகிச்சை பெறுமாறு கூறி அனுப்பப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாய் ஒருவரின் கிளினிக் கொப்பியே இரண்டாவது படத்தில் உள்ளது. அந்த தாய் வவுனியாவில் இருந்து ஒவ்வொருநாளும் அனுராதபுரம் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து விட்டார். இது போல் எத்தனையோ துன்பியல் சம்பவங்கள்.


மொழி புரியாதவர்களுக்கு பொருளாதார கஷ்ரம் உள்ளவர்களுக்கு இது எவ்வளவு கடினமானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா ? அத்துடன் இப்போது கொரோனாவின் தாண்டவம் வேறு. ஏன் இவ்வாறு மனிதாபிமானம் இல்லாத மிருகங்களாக நடந்து கொள்கின்றனர்?


இது தொடர்பில் ஏன்சுகாதார அதிகாரிகள் , மக்கள் பிரதிநிதிகள் பாராமுகமாக உள்ளனர்? இவர்களை இடமாற்றத்திலாவது அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு வேறு கதிரியக்க வியலாளர்களை நியமித்து புற்றுநோய் சிகிச்சை பிரிவை முழுமையாக இயக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments