மூடியதை திறக்க சொன்ன இலங்கை அமைச்சர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையினால் முடக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர்

காமினி லொக்குகே திறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவினால் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பின் புறநகராகிய பிலியந்தல சுகாதார சேவைப் பிரிவுக்கு உட்பட்ட பிலியந்த மற்றும் கெஸ்பேவ பிரதேசங்களில் சில பகுதிகளை முடக்குவதற்கு சுகாதார சேவைப் பணிப்பாளரது அனுமதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தப் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நூற்றுக்கும் அதிகமானவர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு முடக்கப்பட்ட பிரதேசத்தை சுகாதார சேவைப் பணிப்பாளரது அனுமதியின்றி, போக்குவரத்து அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான காமினி லொக்குகே கடந்த ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அமைச்சரின் தலையீட்டிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கெஸ்பேவ சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகம் குற்றஞ்சாட்டியிருந்தது. இதுகுறித்து விசாரணை செய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர், அந்தக் குழுவை நேற்றைய தினம் கெஸ்பேவ சுகாதாரப் பிரிவுக்கு அனுப்பி விசாரணைகளையும் நடத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலினால் முடக்கப்பட்ட பிரதேசத்தை அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி திறந்துவைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் காமினி லொக்குகேவின் மருமகனான முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் துஷார பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments