நாட்டிவைக்கும் மரங்களை கூட விடவில்லை!



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே-18) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் பொன்னாலையில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்று பிடுங்கப்பட்டுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை அளவான மரக்கன்றுகளை தாயகம் முழுவதும் நடுகை செய்யும் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை இந்த மரக்கன்று நடப்பட்டது. 

நூற்றாண்டு காலம் நிலைத்துநின்று நிழல் பரப்பக்கூடிய ஆலமரக்கன்று ஒன்று பெரும் சிரமத்தின் மத்தியில் கொண்டுவரப்பட்டு பொன்னாலை சந்திக்கு சமீபமாக  நடப்பட்டது.  உடனடியாகவே கூடும்  அமைக்கப்பட்டது. 

எனினும், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் இந்த மரக்கன்றை பிடுங்கி அழித்துள்ளதுடன்  இதற்கு அமைக்கப்பட்ட கூட்டினையும் பற்றைக்குள் வீசி கேவலமான செயலைச்  செய்துள்ளனர். 

இறந்த இலட்சக்கணக்கான ஆத்மாக்களின் நினைவாக நடப்பட்ட இந்த மரக்கன்றை பிடுங்கியமை மிகக் கீழ்த்தரமான செயற்பாடாகும். மனித நேயம் என்றால் என்ன எனத் தெரியாத காட்டுமிராண்டிகளே இந்தச் செயலைச் செய்திருப்பர். 

போரில் துடிக்கத் துடிக்க இறந்தவர்களின் இலட்சக்கணக்கான ஆத்மா மேற்படி மரக்கன்றை அழித்தவர்களைச் சும்மா விடாது எனவும் இதற்காக அவர்கள் வருந்தவேண்டி ஏற்படும் எனவும் மரக்கன்றை நடுகை செய்த செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயலுக்கு மிக வன்மையான  கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

No comments