முள்ளிவாய்க்கால் தடை: குருந்தூர் மலையில் கொரோனா இல்லையாம்!

 

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக

முள்ளிவாய்க்கால் மண்ணில் ,மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் இன்று முல்லைதீவு குருந்தூர் மலையில் நூற்றுக்கணக்கில் படையினர் மற்றும் பிக்குகளது பங்கெடுப்புடன் இரவிரவாக வழிபாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குருந்தூர் மலையில் விகாரையொன்றை அமைக்க முனைப்பு காட்டப்பட்டுவருகின்ற நிலையில் இன்றிரவு சுமார் நூற்றைம்பது வரையிலான படையினர் புத்த பிக்குகள் சகிதம் அங்கு குவிந்திருப்பதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர்கள் உட் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தரமாக அங்கு பிக்கு ஒருவரை தங்கவைத்து விகாரைக்கான வழிபாட்டு நடவடிக்கைகளை ஆரம்ப்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக உள்ளுர் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.  



நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் குருந்தூர் மலை எந்த வகையினுள் என கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர்; கைது செய்துள்ளதுடன் உடமைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் அனுமதியின்றி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடாத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் பிறந்த நாள் நிகழ்வை  ஏற்பாடு செய்த பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


No comments