சாப்பாட்டுராமன் கைதாகி பிணையில் விடுதலை!


 அதிக அளவிலான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டு, யூடியூப் மூலம் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன். இவர் கொரோனாவுக்கு ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைத்ததால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன். சித்த மருத்துவத்தில் பிஎஸ்எம்எஸ் படித்துவிட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில், அய்யப்பன் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றைச் சொந்த ஊரிலேயே நடத்தி வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரில் யூடியூப் ஒன்றைத் தொடங்கினார். அப்போது முதல் அவரது பெயர், ‘சாப்பாட்டு ராமன்’ என்றானது.

3 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களையும் சாப்பாட்டு ராமனுக்கு கிடைத்தனர்.

கை நிறையச் சோற்றை உருட்டி, அதை சேலஞ்சாக சாப்பிட்டு வீடியோ பதிவிடும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். ’3 கிலோ மஷ்ரூம் பிரியாணி’, ‘4 கிலோ பஞ்சாபி ஸ்டைல் மட்டன்’, முழு கிடா விருந்து’, 9 ப்ளேட் சாப்பாடு & ஃபிஷ் கிரேவி’, ‘5 கிலோ மட்டன் பிரியாணி’ என அதிக அளவிலான உணவுகளைச் சாப்பிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

இவ்வளவு உணவுகளை சாப்பிடும் அவர், அது ஜீரணமாவதற்கும் சில சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வார். அதற்கும் யூடியூப்பில் விளக்கம் கொடுத்து விற்பனை செய்து வந்தார். தனது சப்ஸ்கிரைபர்களுக்கு, ஜீரணமாவதற்கும், உடல் எடையை குறைக்கவும் சில டிப்ஸ் கொடுப்பார்.

இந்நிலையில் தான், ‘சாப்பாட்டு ராமன்’ கொரோனாவுக்கு ஆங்கில மருந்துகளை, உரிய அங்கீகாரம் இன்றி பரிந்துரைத்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் சென்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சித்தா மருத்துவமனை அதிரடியாக நேற்று (மே 27) சோதனை நடத்தினர். இதில் மருத்துவமனையில் இருந்து ஆங்கில மாத்திரைகளைப் பறிமுதல் செய்து   மருத்துவமனக்கு பூட்டு போட்டனர்.

தொடர்ந்து சுகாதாரத் துறையினர் 'சாப்பாட்டு ராமன்’ மீது கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாம் கீழ்குப்பம் காவல்நிலையத்தில் விசாரித்ததில், “ ‘சாப்பாட்டு ராமன்’ உரிய அனுமதி இல்லாமல் ஆங்கில மருந்தை பரிந்துரை செய்ததால் அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினோம். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கைதான பிறகு, கொரோனா மறு பரிசோதனை எடுத்து, முடிவு எதுவும் வரவில்லை. இதன் காரணமாக ஜாமின் பெற்று தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

No comments