முடக்கம் தொடங்கியது:மேலும் தனிமைப்படுத்தல்கள்!நாடளாவிய ரீதியில் முடக்க நிலை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும்  மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 கிராம சேவகர் பிரிவுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளும், குருநாகல் மாவட்டத்தில் 24 கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கபடவுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர், தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும்.

அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.No comments