நாலாங்கட்ட ஈழப்போரின் பெரும் துயரத்தை தூக்கிச் சுமந்தசம்பூர் பெருநிலப்பரப்பின் நீங்காத வலிமிகு நாள். 25.04.2021


சம்பூர் பெயருக்கேற்ப சம்பூரணமாய் செழித்திருந்த பெருநிலப்பரப்பு. ஏன் பெருநிலப்பரப்பு என இதைகூறுவது எனின் அறுபதிற்கும் மேற்பட்ட

குளங்களையும், அதன் முன்றலில் வயல்களும், குள மேற்பரப்பில்காடுகளுமாக அமைந்த இயற்கை அரணோடு மட்டுமன்றி நீண்ட நெடிய கரையோர வளங் கொண்டநிலப்பரப்பும் ஆகும். அத்தோடு சம்பூர் பெருநிலப்பரப்பினுள் கூனித்தீவு, நவரெட்ண புரம், சூடைக்குடா, கொக்கட்டி மற்றும் இளக்கந்தை போன்ற கிராமங்களும் அடங்குகின்றன.

நால்வகை நிலமும் வளங்கொழிக்கும் தேசமாக சம்பூர் நிலப்பரப்பு காணப்பட்டாலும், ஈழப்போராட்டத்திலும்தனக்கான பெரும் வகிபாகத்தை வகித்திருந்தது என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். இந்தநிலப்பரப்பு தமிழீழ வரலாற்றின் முக்கியதோர் திருப்புமுனையாகவும் செயற்பட்டது எனலாம். வீரஞ்செறிந்தமண் இது என்பதற்கு பலவகையான எடுத்துக் காட்டுகள் ஆதாரமாய் உள்ளன.

நாளும் பொழுதும் மகிழ்வாய் கழிந்த காலமென்றே அக்காலத்தை கூறலாம். ஏனெனில் தமிழீழ இராணுவத்தின்முழுமையான பாதுகாப்பிலும் நிருவாக கட்டமைப்பிலும் கண்காணிக்கப்பட்ட நிலப்பரப்பாகஅமைந்திருந்தது. இவ்வாறான காலகட்டத்தில் தான், இலங்கை தலைநகரான கொழும்பில் ஒரு பெருந்தாக்குதலை முன்னெடுத்தது தமிழீழ இராணுவம். அதற்கு பதிலடி கொடுக்கவென இலங்கை இராணுவமுப்படைகளும் சம்பூர் பெருநிலப்பரப்பை நோக்கிய தாக்குதல் திட்டத்தை வகுத்து, அதன்படி இயங்க ஆரம்பித்தனர்.

ஏன் சம்பூரை தனது தாக்குதல் களமாக இலங்கை அரச இயந்திரம் எடுத்துக் கொண்டது?

இதற்கு சிறப்பான காரணம் திருகோணமலை துறைமுகத்துக்கு மிகவும் பாதுகாப்பான அரணாக சம்பூர்நிலப்பரப்பு திகழ்ந்ததே ஆகும். இதற்கு மேலாக ஒருமுறை சம்பூரை பின்னணி நிலமாக கொண்டு அரசின்கடற்படை தளத்தின் மீதான தாக்குதலானது பெரும் வெற்றியை ஏற்படுத்தி தந்தது. இத்தாக்குதலின் போது அரச இயந்திரம் முற்றுமுழுதாக செயலிழந்தே கிடந்தது எனலாம். ஆகையால் சம்பூர் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இலங்கை அரசு தள்ளப்பட்டது. இலங்கை அரசை விட சர்வதேசமும் இந்நிலைப் பாட்டையே வலியுறுத்திக் கொண்டிருந்தது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, இலங்கையின் அரச விமானங்கள் வன்னி பெருநிலப்பரப்பைநோக்கி தாக்குதலை நடாத்தாது, மாறாக சம்பூரை நோக்கி தாக்குதலை நடத்த துல்லியமாக திட்டமிட்டது. இதற்கு முக்கிய காரணமே திருகோணலை துறைமுகத்திற்கு மிகவும் பாதுகாப்பரணாக இருப்பது சம்பூர்பெருநிலப்பரப்பே என்பதே முக்கிய காரணமாகும்.

தாக்குதலின் போது மக்களின் மனநிலை

சித்திரை மாத வெப்பத்தை தாங்கிக் கொண்டபடி, சம்பூர் பெருநிலப்பரப்பு மகிழ்ந்து கொண்டிருந்தது. வழமை போல் மக்கள் மனங்களிலும் மகிழ்ச்சி கூடுகட்டி குதுகலித்துக் கொண்டிருந்தது. வீசுகின்ற காற்றும்தமிழை மட்டும் சுமந்தபடி மணம் வீசியது. கடல் அலையும் அமைதியை ஆடையாக அணிந்தபடி கரையைஅணைத்தபடி தழுவிக் கிடந்தது.

பாடசாலை மணியும் கோயில் மணியும் அறிவையும் பக்தியையும் ஞாபகப்படுத்திய வண்ணம் ஒலித்து ஓய்ந்தது. கறவையும் பறவையும் இரைதேடி சென்றிருந்தது. அப்போது தான் அந்த ஒலிபெருக்கி அதன் குரல்வளையில்ஈரப்பதன் இல்லாத வறண்ட குரலில் தன் சோகத்தை சொல்லிக் கொண்டது. 

“ சம்பூர் வாழ் மக்களே ..! எம்மையும் எமது இருப்பிடத்தையும் குறி வைத்து அரச விமானங்கள் இரசாயணக்குண்டுகளை வீசப்போகின்றன.. பாதுகாப்பாக இருங்கள்.. உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்..” என்றதும்எதுவும் புரியாத மக்களின் மனங்களில் பயம் தொற்றிக் கொள்ள தமக்கான பாதுகாப்பு அரணை தயார்செய்வதில் தீவீரமாக ஈடுபட்டனர்.

இதுவரை காலமும் மரநடுகைக்கும், வீடு கட்டுவதற்கும் தம் நிலத்தை அகழ்ந்த மக்கள் முதன்முறையாக தம்பாதுகாப்பிற்காக பதுங்கு அகழிகளை அமைக்க தொடங்கினர். 

தென்னை, பனை மற்றும் சிலவகை மரங்களை வெட்டி தமக்கான பாதுகாப்பை உறுதிசெய்தபடிகாத்திருந்தனர். அன்றைய பொழுது கதிரவனின் கரங்களில் வெம்மை குறைந்த தழுவலில் பயபீதியில் மூழ்கி இருந்தது சம்பூரணம்.

மதியவேளை கடந்த சில கணங்களில் வானத்தில் வெள்ளிப் பறவைகளின் வருகை அதிகரித்தது. காதுகளில்அதன் இரைச்சல் நுழைய, விழிகளில் அதன் உருவம் தெரிய மிக உயரமாக பறந்து பின்பு தாழப்பறந்து அதன்வேலையை திறன்பட செய்து கொண்டிருந்தது. அதன் இலக்கில் பலியாக ஆதிக்குடிகள் வாழ்ந்த கொக்கட்டிஎனும் சேனைக்குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டதை உறுதி செய்தபடி அந்த வெள்ளிப்பறவைகள்திருப்தியோடு சென்றன.

விமானங்கள் உமிழ்ந்த குண்டுகளின் அதிர்வை தாங்கியபடி சம்பூர் பெருநிலப் பரப்பு பதறியது. இத்தோடுதாக்குதல் முடிந்துவிட்டதென நம்பியபடி மக்களும் ஊரும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தன. அந்தநள்ளிரவில் காற்று மட்டும் ஏதோ ஒரு துயரச் செய்தியை சுமந்து அலைந்தது. தூக்கம் துறந்த மக்கள்இ காற்றின்கதறலின் இரைச்சலை உணரத் தொடங்கினர். அப்போது வீதி எங்கும் தமிழீழ போராளிகள் தமதுபடையணியை நகர்த்தியபடி, அங்கு இடம்பெறப் போகும் தாக்குதலின் அபாயத்தையும் தெரிவித்தேநகர்ந்தனர்.

மக்களுக்கு எங்கு செல்வதென்ற இக்கட்டான சூழ்நிலையில் பரிதவித்தனர். சிலர் பதுங்கு குழிகளேதஞ்சமென தீர்மானித்தனர். சிலர் காடுகளை நோக்கி பயணித்தனர். சிலர் ஊரை விட்டு நகரந்திட திட்டம்போட்டு இருக்கையில்இ இடியும் மின்னலுமாய் பேரிசைச்சலோடு வீடுமனைகளில் பீரேங்கி குண்டுகள் வீழ்ந்துவெடித்தன. இதுவரை காலமும் இவ்வாறான தாக்குதலை உணராத மக்கள் அங்குமிங்கும் ஓடியோடிஉறவுகளை தேடி ஓப்பாரி வைத்து அழுதனர்.

சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது அவ்வப்போது திடீர் தாக்குதலை அரச இயந்திரம் மேற்கொள்வதுண்டு. ஆனால்இத்தகைய தாக்குதலே முற்றிம் வேறுபட்டதோடு ஒரே தடவையில் நாற்பது பீரேங்கி குண்டுகளைவெளித்தள்ளியபடி பேராபத்தை ஏற்படுத்தும் நிகழ்வை சம்பூர் மக்களும் அந்நிலமும் முதன் முறையாகஅனுபவித்தன.

பல்குழல் பீரேங்கி தன் வயிற்றை நிரப்பவும், தனது சூட்டை தணிக்கவும் எடுத்துக் கொண்ட நேரத்தில் மக்கள்யாவரும் பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தை விட்டு ஏதிலிகளாக, நடைப்பிணங்களாக வீடுகளை விட்டு வீதிகளில் இறங்கி உயிரைக் காக்க அந்நிலா ஒளியில் கண்ணீரோடு பயணித்தனர். ஒவ்வொருவரும் நாளையோ, நாளைமறுநாளோ திரும்பிவருவோம் என்ற எண்ணத்திலே பிரிய மனமின்றி கடற்கரைச்சேனை, சந்தோசபுரம், பாட்டாளிபுரம் மற்றும் உப்பூறல் என இரவோடிரவாக நடந்தனர். ஆனால் அம்மக்கள் சொந்த நிலத்தைவந்தடைய பத்தாண்டுகள் வனவாசம் இருந்தனர்.

திருகோணமலை எல்லை தாண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் தஞ்சமடைந்து, பல நலன்புரி நிலையங்களில்பலபல இன்னல்களை அனுபவித்தபடி வாழ்ந்தனர். இந்த எறிகணை தாக்குதலின் போது இருபதிற்கும்மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

சம்பூர் மக்களின் இன்றைய நிலை

பொதுவாக இந்நிலம் தற்சார்பு பொருண்மியத்தை அடிப்படையாக கொண்ட நிலமாகும். மக்கள் தமக்கானவீடுகளை தாமே உழைத்து கட்டினார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த நாலாங்கட்ட ஈழப்போரின் போதுசம்பூர் மக்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துக்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன. ஆதலால்அரசின் நலன்புரித் திட்டங்களை நம்பியபடி குடிசைகளில் வாழ்கின்றனர்.

இதுவரை காலமும் இம்மக்களுக்கான பூரண நிவாரண நடவடிக்கைகள் எதுவும் அரசால்மேற்கொள்ளப்பவில்லை என்பதே மிகவும் துன்பகரமான செயலாகும். அத்தோடு ஒரு பாரபட்சமான நிகழ்ச்சிதிட்டத்தை அரசும், அரசு சாராத நிறுவனங்களும் செய்தவண்ணம் உள்ளன. தமிழ் அரசியியல்வாதிகள் இம்மக்களுக்காக எந்நவொரு உதவியையும் முழுமனதோடு செய்ய முன்வராத நிலையில் மக்களின் அயராதஉழைப்பில் தமக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்கின்றனர்.

சம்பூர் பெருநிலப்பரப்பின் தற்போதைய நிலை

நாலாங்கட்ட போரின் முன்பு தனித்தமிழர் வாழும் பகுதியாக இருந்த நிலம் தற்போது பலதரப்பட்டஅடக்குமுறைக்குள் தள்ளப்ட்டு விட்டது. ஏனெனில் மக்களின் நிலம் அரசினால் கையகப்படுத்தப்பட்டு அனல்மின்சாரம் மற்றும் கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமக்களின் போராட்டத்தினால் சற்று தாமதமாக தடைபடுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் சம்பூர் நிலப்பரப்பு திருகோணமலை துறைமுகத்துக்கு ஒரு பாதுகாப்பு நிலம் என்பதைஉறுதிப்படுத்தும் நிகழ்வாக சம்பூர் கடற்கரையோரமாக பிரமாண்டமான பல ஏக்கர் பரப்பளவை கொண்டகடற்படை பயிற்சி கல்லூரி நிறுவப்பட்டு இருப்பதும் சம்பூர் பெருநிலப்பரப்பின் இருப்பைகேள்விக்குறியாக்கி உள்ளது.

எனவே மக்களின் மனவுறுதியும் காளி ஆச்சியின் அருளும் இருக்கும் வரை சம்பூர் பெருநிலப்பரப்பின் இருப்புஉறுதியாகும். இந்நாளில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிசெலுத்தியபடி சம்பூர் நிலப்பரப்பை சூழந்துள்ள அபாயத்தை நீக்குவதற்கு நாம் யாவரும் ஒற்றுமையோடு ஒரேபாதையில் பயணிப்போம்.

ஞா. ரேணுகாசன்

No comments