இறையியலையும் இனவிடுதலையையும் தனித்துச் சுமந்த ஒற்றைப் பனை! பனங்காட்டான்
இந்த வாரத்து விடயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக, கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றி இரண்டு வாசகர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமை உண்டு.
இலங்கைப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 1990ல் ஜெனிவாவுக்குச் சென்று குரல் கொடுத்த முதலாவது இலங்கையர் - தோற்றுப்போன அரசியல்வாதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச என்று கடந்த வாரம் எழுதியிருந்தேன்.
கடந்த வருடம் தமது நாற்பதாண்டு அரசியல் வாழ்வு பூர்த்தியைக் கொண்டாடியவர் மகிந்த என்றும், 2015ல் ஜனாதிபதித் தேர்தலில் தோற்பதற்கு முன்னர் இவர் ஒருபோதும் தோல்வி காணாதவர் என்றும் ஆர்வமுள்ள இருவரும் சுட்டிக்காட்டினர்.
மகிந்த ராஜபக்ச முதன்முதலாக தமது 25வது வயதில், 1970ம் ஆண்டு அம்பாந்தோட்டையின் பெலியத்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாகத் தெரிவானார். 1977 பொதுத்தேர்தலிலும் 1983 இடைத்தேர்தலிலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரிடம் இவர் தோல்வியடைந்தார். சத்திர சிகிச்சை மருத்துவரான ரஞ்சித் அத்தபத்து இத்தேர்தல்களில் வெற்றி பெற்றவர்.
இந்த அடிப்படையிலேயே மகிந்தவை தோற்றுப்போன அரசியல்வாதியென குறிப்பிட்டேன். இவர் கடந்த வருடம் கொண்டாடிய நாற்பது ஆண்டு அரசியல் வாழ்வு என்பது, பன்னிரண்டு ஆண்டுகள் எம்.பியாக இருக்காததையும் உள்ளடக்கியது.
கல்வித் தகைமைகளுடன் மகிந்த நேரடியாக சட்டக்கல்லூரிக்குள் நுழையாதவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 1970-1977 காலத்தில் நீதியமைச்சராகவிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டக்கல்லூரி அனுமதிக்கு விசேட சலுகை வழங்கியிருக்கவில்லை என்றால், இவர் சட்டத்தரணி ஆகியிருக்க முடியாது. இதனை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் கூறுவேன்.
இனி, இவ்வார விடயத்துக்கு வருவோம். இந்த மாதம் உலகளாவிய ஈழத்தமிழ் மக்களுக்கு துயரமான ஒன்று. தமிழ் மக்களின் தொடர் துயரினைத் துடைக்க, தாம் இயங்கு நிலையில் இருந்த காலம்வரை தம் வாழ்வை அர்ப்பணித்த இராயப்பு யோசெப் ஆண்டகை கடந்த முதலாம் திகதி நிலையற்ற உலகவாழ்வைத் துறந்து, நித்திய அமைதியில் இறையடி சேர்ந்தார்.
தனது ஆடுகளுக்காக உயிர் கொடுத்த நல்லாயன் யேசுவை தம் கண்முன் கொண்டு, தம் மக்களுக்காக நல்லதொரு மேய்ப்பராக இவர் பணிபுரிந்த காலம் உயிராபத்து நிறைந்தது.
துறவு வாழ்வில் பொது நிலையினரின் உருவாக்கத்தில் பெரும் கரிசனை கொண்டு, தமது அனைத்துப் பணிகளையும் ஒன்றாக்கி அதில் திருப்தி கொண்டு வாழ்ந்த புனிதர் இவர்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற முக்கோட்பாடுகளுடன் வீச்சுக் கொள்ள ஆரம்பித்த வேளை, அரச பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்க முடியாது மக்கள் கிராமம் கிரமமாக தவழ்ந்தும், ஊர் ஊராக ஊர்ந்தும், நகரம் நகரமாக நகர்ந்தும் இழப்புடன் இடப்பெயர்வுகளை சந்தித்த காலத்தில் - 1992ல், இராயப்பு யோசெப் ஆண்டகை துணிவுடனும் நெஞ்சுரத்துடனும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பொறுப்பை ஏற்றவர்.
பலமுனைத் தாக்குதல்களால் காயப்பட்டவர்களை தமது கைகளால் ஏந்தி மருத்துவமனை கொண்டு சென்றவர். அச்சத்திலும் உயிராபத்திலும் இருந்தவர்களுக்கு தமது பிரசன்னத்தால் ஆறுதலும் தேறுதலும் கொடுத்தவர். நேர்மையாகச் சொல்வதானால், போர்க்காலத்தில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர் ஆண்டகை அவர்கள்.
உண்மையை உண்மையாக எடுத்துரைக்கும் சந்தரப்பங்களில், அரச தலைவர்கள் - அமைச்சர்கள் - படைத்தளபதிகள் - வெளிநாட்டு பிரமுகர்கள் - ராஜதந்திரிகள் என்று பார்க்காது, நேருக்கு நேராக நெஞ்சுரத்தோடு களநிலைமையை எடுத்துக்கூறிய அஞ்சா நெஞ்சர் இவர்.
2009ல் முள்ளிவாய்க்காலில் உறைநிலை கண்ட போர்க்காலம், ஆயர் அவர்களின் திருப்பணியின் தலையாய காலம் எனலாம்.
இந்தக் கொடூர யுத்தத்தில் 1,46,000க்கும் மேலான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்ற புள்ளிவிபரத்தை முதன்முதலாக உரத்துக் கூறியவர் இராயப்பு யோசெப் ஆண்டகை அவர்களே.
போதிய ஆதாரங்களை தம் வசம் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்களிடமும் சர்வதேச பிரதிநிதிகளிடமும் இப்புள்ளிவிபரத்தை நேரடியாகவும் எழுத்து மூலமும் எடுத்துச் சொன்ன ஆயர் அவர்கள், இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் குழுவின் முன்னாலும் இதனை ஒப்புவித்தவர். இவ்வேளை இவருக்கு மறைமுகமாக உயிர் பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாயினும், அதனையிட்டு ஆயர் அவர்கள் அச்சம் கொள்ளவில்லை.
போர்க்காலத்தில் வன்னியில் இருந்த மூன்று இலட்சம் மக்களில் 1,46,000 வரையானவர்கள் எங்கே போனார்கள் என்று ஆயர் அவர்கள் எழுப்பிய கேள்வி, இந்தப் புள்ளிவிபரத்தின் ரிசிமூலம் என்ன என்ற மற்றொரு கேள்வியை எழுப்பியது.
தாம் கூறிய தரவுக்கு பொறுப்புக் கூற வேண்டியவராக இருந்த ஆயர் அவர்கள், இலங்கை அரசாங்கம் உலக வங்கிக்கு வழங்கிய கடன்பெறு ஆவணம் ஒன்றிலிருந்தே இந்தத் தரவினைப் பெற்றார் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
வன்னி மாவட்டத்தில் புதிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடம் சமர்ப்பித்த நிதிகோரும் விண்ணப்பத்தில், இம்மாவட்ட மக்களின் தொகை மூன்று இலட்சம் வரையானது எனத் தெரிவித்திருந்தது.
அத்துடன், இம்மாவட்டத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்துக்கான உணவுப் பொருட்களை பெறும் கூப்பன் அட்டைகளும் மூன்று இலட்சத்துக்கும் மேலாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
போர் உறைநிலைக்குச் சென்ற பின்னர் அரச முகாம்களில் அடைபட்டவர்கள், படையினரால் சிறைபிடிக்கப்பட்டவர்கள், போரின்போது கொல்லப்பட்டவர்கள் எனப்படுவோரின் எண்ணிக்கையை மூன்று இலட்சத்திலிருந்து கழித்து வந்த தொகையே 1,46,000 என கணக்கிடப்பட்டது. இவர்களுக்கு என்ன ஆனது? அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமென்பதே ஆயர் அவர்கள் முன்வைத்த வாதம்.
சிலவேளை இந்த எண்ணிக்கை சிறிதளவில் முன்னுக்குப்பின் ஏறி இறங்குவதாக இருக்கலாம். போரில் வென்றதாகக் கூறும் அரசாங்கமே இதனைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்த வேண்டும்.
படையினரிடம் சரணடைந்தவர்களை அல்லது படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களை தம்மிடம் இல்லையென்று கூறும் அரச தரப்பு, ஆயர் அவர்கள் கூறிய எண்ணிக்கையை ஒருபோதும் ஏற்காது. ஆனால், 1,46,000 மக்கள் எங்கே என்ற கேள்விக்கான பதிலை நேர்மையான பணியாக தொடர்ந்து எடுக்க வேண்டியது வலி சுமப்போரின் தலையாய கடமை. இதுவே ஆயர் அவர்களின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியது.
தமிழ்த் தேசத்தில் அரச பயங்கரவாதம் தலைவிரித்துத் தாண்டவமாடிய கொதிநிலைவேளை, ஆயர் அவர்கள் விடுத்த எந்தக் கோரிக்கையையும் அரச தரப்பு ஏற்கவில்லை. இலங்கையிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் மேலிடமும்கூட அவ்வாறே நடந்து கொண்டது.
பேராயர் மல்கம் றஞ்சித் எப்போதும், ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையை புறந்தள்ளியே வந்துள்ளார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் வேகம் கொண்ட வேளைகளில் ஆயர் அவர்கள் தமது கண்டனத்தைத் தெரிவிக்கையில், பேராயர் தம்மை சிங்களப் பேரினத்தின் ஓர் அங்கமாக நிறுத்தி இவரது கருத்துகளை ஏற்க மறுத்து வந்தார்.
நவாலி தேவாலய குண்டுவீச்சு, நாகர்கோயில் பாடசாலைக் குண்டுவீச்சு போன்ற பல சம்பவங்கள் இதற்கு உதாரணமாக உண்டு.
வண.பிதாக்கள் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் (முருங்கன்), மேரி பஸ்தியான் (வங்காலை), சந்திரா பெர்னாண்டோ (மட்டக்களப்பு), சு. செல்வராஜா (அம்பாறை), யுஜின் ஜோன் றொபேர்ட் (வாழைச்சேனை), மரியாம்பிள்ளை சரத்ஜீவன் (வன்னி), நிகால் ஜிம் பிறவுன் (அல்லைப்பிட்டி), வின்சன்ட் வினோதராஜா (மீசாலை), நிக்கிலாபிள்ளை பாக்கியரஞ்சித், வன்னிப் போர்முனையில் அகதிகளுக்கு பணியாற்றியபோது காணாமல்போன ஐந்து குருமார்கள் போன்றோரின் விடயங்களில் பேராயர் மல்கம் றஞ்சித் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று பணியாற்றத் தவறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் படையினரால் கூட்டிச்செல்லப்பட்ட வண. பிரான்சிஸ் யோசெப் அடிகளார் விடயத்தில்கூட ஆயர் இராயப்பு யோசெப் அவர்கள் தனித்து நின்றே குரலெழுப்பினார்.
அமைதி, சமாதானம், மனிதநேயம், மனித உரிமை ஆகியவற்றுக்காக ஓயாது குரல்கொடுத்த ஆயர் தமது எழுபத்தைந்தாவது வயதில், 2015ம் ஆண்டு திடீர் சுகவீனத்தால் ஓய்வுபெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இரவுப் போசனம் உண்ட பின்னரே ஆயர் அவர்கள் திடீர் சுகவீனமுற்றார். இவரால் பேச முடியாது நடமாட முடியாது போனதற்கும் இரவு உணவுக்கும் சம்பந்தம் இருக்கலாமென்ற சந்தேகம் இன்றுவரை தீர்க்கப்படாமலே உள்ளது.
உடல் நலிவுற்று, படுக்கையில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த நிலையிலும் இனத்தின் காவலராகவே அவரை மக்கள் மதித்தனர். பேச முடியாதவராயினும் அதற்கும் அப்பால் கடைசி நிமிடம்வரை தனது மக்களை நேசித்த ஒருவராகவே மக்கள் அவரைப் பார்த்தனர்.
2014ம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கம் வழங்கிய - இனமான ஏந்தல் எனும் புகழ் விருதுக்குத் தகுதியானவராக, இறை பணியுடன் இனவிடுதலையையும் தம் தலைமேல் தனித்துச் சுமந்து வாழ்ந்த ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தமிழினத்தின் முற்றத்தில் காப்பரணாகவும் காவலராகவும் நின்ற ஒற்றைப் பனை!
தமிழ் இனம் விடுதலை பெற்று உரிமையுடன் வாழும் காலந்தோறும் இந்த முற்றத்து ஒற்றைப் பனை ஓங்கி நின்று ஒளி பரப்பும்!
Post a Comment