தேனிலவு கசந்தது:பங்காளிகள் இரகசிய பேச்சு!


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இ​தேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த 8 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில், மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். அதன் பின்னரே மைத்திரிக்கும் விமலுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 8ஆம் திகதியன்று நடைபெற்ற சந்திப்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

அபே ஜனபல வேக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன,  கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதம செயலாளர் டியு குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாவும் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments