ஜேஆரை விஞ்சுவாரா ஜிஆர்! ஹிட்லர் மீண்டும் பிறந்துள்ளாரா? பனங்காட்டான்

  • விக்கியர் வீசிய விதை வேலன் சுவாமிகளிடம் முளைவிட ஆரம்பித்துள்ளதா?

  • தாம் ஹிட்லராகப் போவதில்லையென கோதபாய இதுவரை தெரிவிக்காதது ஏன்?


இலங்கையிலும் உலக அரங்கிலும் பத்தாண்டுகள் தனிக்காட்டு ராஜாக்களாக பவனி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் உட்கூட்டு மோதலாலும், உட்கட்சிப் போட்டியாலும் அல்லாடிக் கொண்டிருக்கிறது. 

முந்தி வந்த செவியா பிந்தி வந்த கொம்பா என்ற போட்டி குடுமிபிடி என்ற அளவுக்கு வந்துள்ளது. ஐம்பதாண்டுக்கும் மேலாக தமிழரசுக் குளத்தில் நீந்தி விளையாடி பயிற்சி பெற்ற அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

அரசியலில் எதையும் எப்போதும் நேர்த்தியாகக் கையாளத் தெரியாதவர் மாவை என்பது ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். எடுத்த எடுப்பில், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அறைகூவியே அவமானப்படுபவர் என்பதும் தெரியும். 

கட்சியின் வளர்ச்சிக்காக சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டவர் என்பது அவரது இன்னொரு பக்கம். ஆரம்பகால தமிழரசுத் தலைவருக்கும் தளபதிக்கும் பணிந்து இயங்கியவர் என்பது இவரது வெற்றிப் பக்கம். 

இப்போது, இயக்க நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இல்லாததால், மாவையர் வாராவாரம் தம்மெண்ணப்படி விதம்விதமான முயற்சிகளை மேற்கொள்கிறார். கூட்டமைப்புக்கும் கட்சிக்கும் ஒரு தளபதி இல்லாததால் இவரே தளபதியாகவும் மாறிவிடுகிறார். 

ஆங்கிலமும் சட்டமும் தெரிந்தவர்கள் என்பதால் பின்கதவால் வந்து கட்சியை உடைப்பவர்களுடன் எதற்காக சேர்ந்து போக வேண்டுமென அவர் நினைக்கிறார் என்றால் அதில் தப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் தமிழ்த் தேச அரசியல் சட்டமேதைகளால் நிரம்பி வழிந்தது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அங்கு சட்டவாளர்கள் அதிகமாக இருப்பர். 

ஆனால், 1970 தேர்தல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜி.ஜி.பொன்னம்பலமும், எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அப்போது இல்லை. அந்தத் தேர்தலில் காங்கிரஸின் மு.சிவசிதம்பரமும், தமிழரசின் அ.அமிர்தலிங்கமும் தோல்வி கண்டனர். நாவூறுபட்டது போன்று சட்டவாளர்கள் மிகக்குறைவான அளவிலேயே தமிழர் தரப்பில் நாடாளுமன்றத்தில் காணப்பட்டனர். 

அவ்வேளை தமிழரசுக் கட்சியின் சபை முதல்வராக உடுவில் எம்.பி. வி. தர்மலிங்கம் இருந்தார். ஒவ்வொரு அமர்விலும் கட்சி சார்பில் அவரே உரையாற்ற வேண்டியதாக இருந்தது. தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் - சட்டவாளராக இல்லாத அவர் அப்போது ஆற்றிய உரைகள் வரலாற்றுப் பதிவுகள். 

சிவாவும் அமிரும் தோற்றிருக்காவிட்டால் தர்மருக்கு அவரது திறமைகளைக் காட்ட இந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்று நான் உட்பட நாடாளுமன்ற செய்தியாளர்களாகக் கடமையாற்றிய பல்வேறு ஊடக நண்பர்களும் கூறிக்கொள்வோம். 

இதனை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராவதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு என்ற கேள்வியுடன் சம்பந்தப்பட்டது. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று கூறப்படினும் கிழக்கு மாகாண சபை பற்றி அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இராசமாணிக்கம் சாணக்கியனை கிழக்கின் முதலமைச்சராக்கலாமென தமிழரசின் ஓர் அணி ஆலோசிக்கிறது. 

இப்பதவிக்குப் போட்டியிட்டு அதில் தோல்வியுற்றால் என்ற கேள்விக்குறியுள்ள நிலைமையில் சாணக்கியன் தமது எம்.பி. பதவியை இதற்காகத் துறப்பாரா என்பது தெரியாது. ஆனால், வடமாகாண சபைக்கு கூட்டமைப்பு வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நியமிக்க வேண்டுமென்ற விருப்பம் முனைப்புப் பெற்றுள்ளது. 

கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனும், தர்மலிங்கம் சித்தார்த்தனும் பச்சைக் கொடி காட்டி விட்டனர். தமிழரசுக்குள் பிந்தி வந்து எம்.பி.யானவர் தவிர மற்றையோரின் ஆதரவு மாவையின் பக்கமாகவேயுள்ளது. 

இதற்கு அப்பால், யாழ்நகர முதல்வர் மணிவண்ணனின் பெயரும் அவ்வப்போது உச்சரிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு சிவில் சமூக அமைப்பின் பிரமுகர் வேலன் சுவாமிகளின் பெயரை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதற்குள் இழுத்துவிட்டுள்ளார். இதனை சும்மா முசுப்பாத்தியாக எடுக்க முடியாது. 

சிவில் சமூக அமைப்பினர் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியாதென்றும், தேர்தலில் போட்டியிட விரும்பினால் சம்பந்தப்பட்டவர் சிவில் சமூக அமைப்பிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடலாமெனவும் அண்மையில் புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் வேலன் சுவாமிகள் தெரிவித்த கருத்து......விக்கியர் வீசிய விதை முளைவிடுகிறது என்பதைக் காட்டுகிறது. 

கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவர் சம்பந்தன் முன்னால் பாரிய கடமையொன்று காத்திருக்கிறது. கும்பகர்ணன் படலத்திலிருந்து நீங்கி, துயில் துறந்து, விரைந்து வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களை முடிவெடுக்க வேண்டும். பேருந்தை தவற விட்டபின், அதனைத் துரத்திச் செல்வதால் பயன் கிடையாது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் கூட்டமைப்புக்குள் தான்தோன்றித்தனமான ஒரு ஹிட்லரை உருவாக்கி விடலாம். 

ஹிட்லர் என்ற பெயர் இலங்கை அரசியலில் மீண்டும் தடல்புடலாக அடிபடுகிறது. 1977ஐ தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை நவீன ஹிட்லர் என்றே பலரும் அழைப்பர். சில ஊடகங்களும் இப்பதத்தைக் கையாண்டன. 

1978ல் இவரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் ஜனாதிபதியை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாத சட்டம், தமக்கு போட்டியாக இருக்கக்கூடியவரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை ரத்தாக்கியது, அரசியல் அமைப்பை மதிக்க வைப்பது என்ற பெயரில் ஆறாம் திருத்தத்தை உருவாக்கி தமிழ் எம்.பிக்களின் பதவியை பறித்தது, சட்டத்தின் துணைகொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்கியது, பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுலாக்கியது, தமது கட்சி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தும்போது திகதியிடப்படாத ராஜினாமா கடிதங்களை முற்கூட்டிப் பெற்றது, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற ஆட்சிக்காலத்தை நீடித்தது.....என்ற பல எதேச்சாதிகார செயற்பாடுகளால் ஹிட்லர் என்ற செல்லப்பெயர் ஜே.ஆருடன் இணைந்து கொண்டது. 

இப்போது, முப்பது ஆண்டுகளின் பின்னர் இந்தப் பெயர் ஜி.ஆருக்கு (கோதபாய ராஜபக்ச) சூட்டப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரியாகவிருந்து மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கற்றுக் கொண்டது, பாதுகாப்புச் செயலாளராகவிருக்கையில் முள்ளிவாய்க்கால் போரில் அள்ளுகொள்ளையாக தமிழரைக் கொன்று குவித்தது, மகிந்தவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட பலரை கேவலப்படுத்தியது......இவற்றின் பின்னர் ஜனநாயகவாதியாக (?) மாறி கடைசி ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியான பின்னர்.....அந்த மக்களே அவரை ஹிட்லராகப் பார்த்து அச்சம் கொள்கின்றனர். 

கோதபாயவை ஆட்சிக் கதிரைக்குக் கொண்டு வந்த பௌத்த பிக்குகள் - பீடாதிபதிகள் தலைநிமிர்த்தி எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இவர் ஹிட்லராக மாறுவாரென்பது அப்போதே தங்களுக்குத் தெரியுமெனவும் குரல்கள் எழுகின்றன. இந்த ஹிட்லரால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது, உள்நாட்டுப் புலிகளுக்கும், புலம்பெயர்ந்த புலிகளுக்குமே ஆபத்து வருமென எண்ணியவர்கள் இப்போது தலையில் கைவைத்து கதறுகின்றனர். 

இலங்கைக்குள் தமிழீழம் உருவாக கோதா ஒருபோதும் அனுமதிக்க மாட்டாரென்று நம்பியவர்கள் சீனதேச குட்டித்தீவு உருவாகுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இதன் வெளிப்பாடாக சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பல அமர தேரர் தெரிவித்த கருத்து முக்கியமானது. 

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் வழியாக தனிநாட்டைப் பெற்றிருந்தால், சர்வதேச அளவில் நாடு இன்று எதிர்கொண்டுள்ள சோதனைகள் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்ட தேரர், தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருப்போம் என்று தெரிவித்திருப்பது, புதிய ஹிட்லரால் நாடு அழியப்போகிறது என்ற அச்சத்தின் வெளிப்பாடு. 

துறைமுக அதிகாரசபை ஆணைக்குழு சட்டமூலம், சமூக வலைத்தளங்களை ராணுவப் பிடிக்குள் கொண்டு செல்ல உருவாகும் சட்;டமூலம், மகிந்த ஆட்சிக்கால அரசியல் மற்றும் நிதி து~;பிரயோகம் செய்தவர்கள் மீதான வழக்குகளை ரத்துச் செய்வது, சிறையிலுள்ள படையினரையும் குற்றவாளிகளையும் விடுதலை செய்வது என்பவை ஹிட்லர் பாணி நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகிறது. 

முள்ளிவாய்க்கால் போரில் நந்திக்கடலில் இரத்தம் நனைந்த கரங்களைக் கொண்ட கோதபாய வேண்டுமா? ஜனாதிபதி கோதபாய வேண்டுமா? என்று எழுப்பிய குரல் ஹிட்லர் பாணியிலானது. 

உலக சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த திகதி ஏப்ரல் 20. இன்றைய ஹிட்லராகப் பார்க்கப்படும் கோதாவின் பிறந்த திகதி யூன் 20. பிறந்த திகதியில் என்ன ஒற்றுமை. 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி ஹிட்லர் தனது பங்கருக்குள் சென்று சைனைட் கடித்துண்டு தன்னைத்தானே சுட்டுக் கொலை செய்தார். 

ஹிட்லர் இறந்த நான்காண்டுகளின் பின்னர், 1949ல் கோதபாய பிறந்தவர். பௌத்த மதமானது மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கை கொண்டது. அடோல்ஃப் ஹிட்லரின் மறுபிறப்பாக கோதபாயவை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களே கருதுகிறார்களா? இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், தம்மை இதுவரை ஹிட்லர் அல்ல என்று கோதபாய மறுக்காததுதான். 

கோதபாய ஹிட்லரா என்ற கேள்விக்கும் அப்பால், 1970களில் ஹிட்லராகவிருந்த ஜேஆரை இன்று ஜிஆர் விஞ்சி விட்டாரா என்பதுவே இன்று எல்லோர் மனதிலும் பீதி கலந்த கேள்வியாக எழுந்துள்ளது. 

No comments