பிரான்சு பாராளுமன்றுக்கு முன்பாக தமிழினப்படுகொலை ஆதாரங்கள்

கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினம் இன்னமும் நீதிகோரி  சர்வதேசத்தின் மத்தியில் போராடி வருகின்றது.சிங்கள அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சி வலையில் சிக்கிய சர்வதேச நாடுகளும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு காரணமாகிய துரதிஸ்டம் நடந்தேறியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் கொடுரத்தை தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாத அரசாங்கம் நடத்தியபோதும் கண்ணை மூடி தடுக்க திராணியற்ற அமைப்பாகவே ஐநா வும் இருந்து விட்டதையும் இன்று ஒப்புக்கொள்ளும் சூழல் இருக்கின்றது.சிங்கள அரசின் அதர்மத்துக்கு துணைபோன வல்லரசுகள் இன்று சிங்கள பேரினவாத்தின் உண்மை முகத்தை கண்டு அதனை வழிக்க கொண்டு வர முயல்கின்றபோதும் இன்று சிங்களப் பேரினவாதம் சர்வதேசத்தை ஒரு பொருட்டாக கொள்ளாமல் நடந்துகொள்வதை இந்த உலகமறியும்.தமிழ் மக்களோ ஆயுதப்போராட்டம் நடக்கும் காலத்திலும் தமது விடுதலைக்காக சர்வதேசத்தின் அனுசரணையை நாடிவர்களாகவே இருந்தார்கள்.ஆனால் அவ்வாறான ஒரு விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இனப்படுகொலையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்றும் தமிழ் மக்கள் சர்வதேசத்தை நீதி தரும் நம்பிக்கையாக பார்க்கின்றார்கள்.அந்த வகையில்தான் சர்வதேச நாடுகளிடம் தமிழர் போராட்ட நியாயங்களையும் இனப்படுகொலை ஆதாரங்களையும் முன்வைத்து நீதிக்கு ஆதரவு தர கையேந்தி நிற்கின்றார்கள்.தட்டுங்கள் திறக்கப்படும் என்பதுபோல தொடர்ந்து தமிழர்களின் குரல்கள் சர்வதேச நாடுகளின் வாசல்களை தட்டி நிற்கின்றது.

அந்த வகையில்தான் பிரான்சில் இயங்கும் அனைத்துலக மனித உரிமை சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன வாரத்தில் புதன் கிழமை தோறும் பிரான்சு பாராளுமன்றம் முன்பாகவும் ஏனைய நாட்களில் பிரான்சில் உள்ள நகர சபைகளின் முன்பும் தமிழினப்படுகொலை ஆதாரங்களாக இருக்கும் நிழற்படங்களை பார்வைக்கு வைத்து நீதி கோரி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.இன்று பிரான்சு பாராளுமன்றம் முன்பாக இனப்படுகொலை ஆதாரங்கள் வைக்கப்பட்டு கவனயீர்ப்பு நடைபெற்றது.

No comments