ஆசிரியருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை!


கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஆசிரியர் ஒருவருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கையின் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 18ம் திகதி கொழும்பு நாலாம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஆசிரியர் சின்னராசா சிவேந்திரன் என்பவரிடம் ஆறு மணித்தியாலத்திற்கு மேல் தீவிர விசாரணை நடாத்திய பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர், தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்குவதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து அவரது பேஸ்புக் கணக்கு அதன் கடவுச்சொல் மற்றும் அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி அதனது கடவுச் சொல் என்பவற்றினைப் விசாரணையின் போது அவரிடமிருந்து பெற்று தம்வசப்படுத்தியதுடன் இலங்கையில் மேற்படி நபர் பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்த முடியாது எனவும் அதனை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படுவீர் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் கிளிநொச்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் மேற்படி ஆசிரியரை எவ்விதமான தொடர்புகளையும் பேண வேண்டாம் எனவும் அதனை மீறி அவருடன் தொடர்பைப் பேணினால் பாராதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.

மேற்படி சி.சிவேந்திரன் அவர்கள் முன்னர் ஓர் சுயாதீன ஊடகவியலாளராக நீண்டகாலமாகப் பணிபுரிந்துவந்தவர் என்பதும், அவர் ஊடகவியலாளராகப் பணியாற்றிய காலத்தில் அவரால் எழுதப்பட்ட செய்திகள், கட்டுரைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் அக்காலப் பகுதியில் அவரால் தனது முகநூலில் பதிவேற்றப்பட்ட செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி அதனது இரகசியக் கடவுச்சொல் என்பவற்றை ரீ.ஐ.டியினர் அவரிடமிருந்து மிரட்டிப் பெற்றுக்கொண்டமையானது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம், தனித்துவம் மறுக்கப்பட்டுள்மையையே வெளிப்படுத்துகின்றது. மற்றும் அவரது முகநூல்க் கணக்கு அதனது இரகசியக் கடவுச்சொல் என்பவற்றினைப் பெற்றுக்கொண்டமையும் முகநூல் உள்ளிட்ட இணையத்தளச் செயற்பாடுகளைப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டமையானது தனிமனித கருத்துச் சுதந்திரத்தை முற்றுமுழுதாக மறுப்பதாகவே அமைந்து காணப்படுகின்றது.

மேற்படி சுயாதீன ஊடகவியலாளரான சிவேந்திரன் அவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் ஏ-9 வீதியால் இரவு 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது, வெள்ளைவானில் வந்த இனந்தெரியாத குழுவினரால் திடீரென வழிமறிக்கப்பட்டு அவரால் எழுதப்படும் செய்திகள் குறித்துக் கேட்டுக் கேட்டு கொலை வெறித்தாக்குதலுக்குள்ளாகியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments