பிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு


பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி நகரத்தின் முதல்வர் மதிப்புக்குரிய Stephen HERVE அவர்களுடன் பொண்டி பிராங்கோ தமிழ்ச்சங்க தலைவர் திரு.கலைச்செல்வன் மற்றும் உறுப்பினர்கள் அழைப்பில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் நிந்துலன், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் மற்றும் தமிழீழ மக்கள் பேரவை செயற்பாட்டாளர் ஆகியோர் மாநகரசபை மண்டபத்தில் 14.04.2021 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நட்பு ரீதியான சந்திப்பை மேற்கொண்டனர்.

மாநகர முதல்வருடன் மாநகர ஏனைய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் நாள் பொண்டி மாநகரசபையில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றாக “ இலங்கையில் நடைபெற்றது தமிழினப்படுகொலை என்றும் அதற்கு காரணமான சிறீலங்கா அரசினை சர்வதேசக் கூண்டில் ஏற்றவேண்டும் என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிராங்கோ தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பினால் மாநகர முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பிரான்சில் ஒவ்வொரு மாநகரங்களிலும் உள்ள அனைத்து பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் மக்களுக்காக ஆற்றும் பணிபற்றி தான் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். பிரான்சு நாட்டில் உள்ள 73 பிராங்கோ தமிழ்ச்சங்கங்களின் செயற்பாடுகள் பற்றியும் அதனை ஒழுங்கு படுத்தி சங்கங்களை நெறிப்படுத்தும் கட்டமைப்பாக தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளதாகவும் தெரியப்படுத்தப்பட்டது. அனைத்தையும் தெளிவாகக் கேட்டுக்கொண்ட முதல்வர், தமிழ் மக்கள் பற்றி அறிந்து கொள்ள அனைத்து பல்லின மக்களையும் கொண்டதொரு கருத்தரங்கைத் தான் நடாத்த விரும்புவதாகவும், தனது மாநகரசபைக் குட்பட்ட வரையறையில் தமிழ் மக்களின் விடயங்களை அறிந்து தான் அவர்களுக்கு உதவிடும் வகையில் மாநகரசபை ஆலோசகர் என்கின்ற பிரதிநிதித்துவத்தை செல்வி பிறேமி பிரபாகரன் என்னும் தமிழ்ப் பெண்ணுக்கு தான் வழங்கியுள்ளதையும் தெரியப்படுத்தியிருந்தார்.

பிராங்கோ தமிழ்ச் சங்கமானது அனைத்து மாநகரங்களிலும் வாழும் தமிழீழ மக்களின் நலனிலும், அவர்களின் கல்வி , கலை, அரசியல், விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாற்றி வருகின்றதையும் அவற்றை நிறைவேற்ற பொண்டி முதல்வர் எமக்கு எப்பொழுதும் உதவியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொண்டி பிராங்கோ தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் தொடர்ந்தும் தமது உறவை நல்ல வகையில் பேணுவதாகவும் தமிழர் தரப்பில் தெரிவித்திருந்தனர். அடுத்து வரும் நாட்களில் மீண்டுமொரு சந்திப்பு நடைபெறவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார். 45 நிமிடங்களாக நடைபெற்ற இச்சந்திப்பு காத்திரமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments