கோத்தா நிர்வாகம்:பாம் ஓயிலுக்கும் தடை!


நாட்டில் பாமாயில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களில் அத்தியாவசியமான மார்கரைன்  பாம் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அதைத் தடை செய்வது அனைத்து பேக்கரி பொருட்களிலும் பல சிக்கல்களை எற்படுத்துகிறது.

எனவே அரசாங்கம் எடுக்கும் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறினார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையின்பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய்யை விநியோகிப்பதை நிறுத்துமாறு சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முள்தேங்காய் பயிர்ச்செய்கையும் முழுமையாக தடைசெய்யப்படுகின்றது.


மேலும் முள்தேங்காய் பயிர்ச்செய்கையை முழுமையாக தடை செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பணிப்புரையை நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முள்தேங்காய் பயிரிடுவதை படிப்படியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.


தற்போது பயிரிடப்பட்டுள்ள முள்தேங்காய் பயிர்ச்செய்கை கட்டம் கட்டமாக ஒரு தடவைக்கு 10% என்ற வகையில் அகற்றி அதற்கு மாற்றீடாக இறப்பர் அல்லது சுற்றாடல் பாதுகாப்புடன்கூடிய ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு அந்நிறுவனங்களுடன் சட்டத்திற்கமைவாக செயற்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது முள்தேங்காய் பயிர்ச்செய்கை மற்றும் பாம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

No comments