சுரேன் இராகவனும் கோரிக்கை விடுத்தார்!



தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் - தொல்பொருள் திணைக்களத்திடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ சொந்தமானதாக இருக்க முடியாதென்றும் அவை இலங்கை  நாட்டுக்கு பொதுவானது என்பதனை தொல்பொருள் திணைக்களத்தினர் நினைவில் கொள்ளவேண்டுமென்றும், தொல்பொருள் துறை தொடர்பில் கற்பிக்கும் களனி, பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களின் துறைசார் நிபுணர்களைக் கொண்டு தொல்பொருள் ஆராட்சிகளை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினை எட்டும் முகமாக  தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள், கிராமிய மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்களுக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொல்பொருள் திணைக்க அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (09) முற்பகல் பத்திரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற போதே கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொல்பொருள் திணைக்களம் தமிழ் பிரதேசங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அப்பிரதேசங்களை சிங்கள பெயர்களைக் கொண்டு வர்த்தமானி அறிவித்தல்மூலம் அடையாளப்படுத்துவதாகவும் இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும் அதனால் வர்த்தமானி அறிவித்தலில் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள் நிர்மலநாதன் அவர்கள் குறிப்பிட்டார். 

அத்துடன் குருந்தூர் மலையை சூழவுள்ள 400 ஏக்கரினை தொல்பொருள் திணைக்களம் கோரியுள்ளதாகவும் ஆனால் 1932 ஆம் ஆண்டு குருந்தூர்மலைப் பிரதேசத்தை சுற்றி 78 ஏக்கர் நிலத்தினை மாத்திரமே வர்த்தமானி மூலம் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியதாகவும் ஆகையினால் 400 ஏக்கருக்கு பதிலாக 78 ஏக்கர் நிலத்தினையெ தொல்பொருள் திணைக்களம் கோரியிருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். 

அத்துடன் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை கோவில் குருக்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றின் மூலம்பிணையில் விடுதலை செய்யப்பட்டமையைக் குறிப்பிட்ட சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள்  இது தொடர்பில் அமைச்சர் தலையிட்டு  குறிப்பிட்ட வழக்கினை வாபஸ்வாங்குவதுடன் தமிழ் மக்கள் முன்புபோல் தொடர்ச்சியாக  அங்கும் குருந்தூர்  மலையிலும் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

அனுராதபுரத்திலுள்ள ருவன்வெலிசாய உள்ளிட்ட பௌத்த விகாரைகள் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்டாலும் அங்கு மக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதனை சுட்டிக் காட்டிய கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களிலும் பொதுமக்கள் காலம்காலமாக மேற்கொண்டுவந்த மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்கலம் கட்டாயம் அனுமதி வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 

அத்துடன் தமிழர் பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு காரணம் சரியான  தொடர்பாடலினை பிரதேசத்தின் மக்களுடனும், அரச உத்தியோகத்தர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கொண்டிருப்பதில்லையெனவும் அதனை எதிர்காலத்தில் சரியான முறையில் நடைமுறைபடுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்வும் குறிப்பிட்டார். 

இதேவேளை மாவட்ட அபிவிருத்தி சபைபின் கூட்டங்களுக்கு வடமாகாண தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகை தருவதில்லையெனவும் அதனாலேயே தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் சரியான தீர்மானமொன்றை எட்டுவதற்கு முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய அதிகாரிகளை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு அனுப்புவதற்கு தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்  குறிப்பிட்டார். 

அத்துடன் தொல்பொருள் துறையில் M.Sc பட்டப்படிப்பினை முடித்தவர்கள்கூட தமிழ்  அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக வெவ்வேறு அரச நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும் அவர்களுக்கு தொல்பொருள் திணைக்களத்தில் ஆராச்சி உத்தியோகத்தர் உள்ளிட்ட தகமைக்கு சரியான வேலை வாய்ப்பினை  வழங்கும் பட்சத்தில், அவர்கள் தொல்பொருள் திணைக்களத்தில் நடவடிக்கைகள் குறித்து பிரதேச மக்களுடன் தமிழ் மொழியிலேயே விளக்கமளிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதுடன் வீணான சந்தேகங்களையும் தவிர்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார். 

அத்துடன் நிலாவறை கிணறு பிரதேசத்தில் எந்தவித முன்னறிவிப்புகளுமின்றி தொல்பொருள் திணைக்களம் குழி தோண்டியதனையும்  அதனால் ஏற்பட்ட  பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி பா.உ  அங்கஜன் இராமநாதன்,  மாவட்ட செயலாளர், பிரதேச செயளளர், பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தி கலந்துரையாடல்களை செய்து விளக்கமளித்ததன் பின்னர் ஆய்வுகளை மேற்கொண்டால் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாமெனவும் குறிப்பிட்டார்.  அத்துடன் அமைச்சரையும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தரும்படியும் அழைப்பு விடுத்தார். 

வடக்கில் தொல்பொருள் திணைக்களம் காட்டும் அவசர அக்கறை தமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாத்தறையில் மூழ்கியுள்ள தொண்டீஸ்வர ஆலயத்தை அகழ்வாராச்சி செய்வதற்கான  அக்கறையை தொல்பொருள் திணைக்களம்  காட்டாமல் இருப்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

இதனைத் தொடர்ந்து பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முஹமட் முஷாரப் உள்ளிட்டவர்களும் வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான  தமது விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன்வைத்தனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் யோசனைகளையும் வரவேற்பதாக குறிப்பிட்டதுடன் பாராளுமன்ற  உறுப்பினர்கள் குறிப்பிட்ட, வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் தமது சமய வழிபாடுகளை தடையின்றி  மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன், தொல்பொருள் பிரதேசங்களை வர்த்தமானியூடாக அடையாளப்படுத்தும் போது தமிழ் மற்றும் சிங்கள பெயர்கள் இரண்டையும் பயன்படுத்துமாறும் குறிப்பிட்டார். 

அத்துடன் தமிழ் உத்தியோகத்தர்களை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்வாங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து மேற்கொள்ளுமாறும் அமைச்சர் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களை கேட்டுக்கொண்டார். 

இதேவேளை தொல்பொருள் திணைகளத்தின் ஆய்வுக்காக  இடங்களை தெரிவு செய்யும்போது அது தொடர்பில் குறிப்பிட பிரதேச செயலகத்துக்கும்  மக்கள் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கும்படியும் அதன்மூலமே  எதிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார். 

வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தினர்  பணியினை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்  எவையென்பது தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளை தனித்தனியாக தமக்கு  வழங்குபடியும் அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

No comments