தெல்லிப்பளை -யூனியன் கல்லூரி வளாகம் யாருக்கு!சுமார் 200 வருட பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகம் தொடர்பில் எழுந்த பிரச்சனை பெரும் சிக்கலாகியுள்ளது.

1816 ஆம் ஆண்டு அமெரிக்கன் திருத்தொண்டர்கள் யாழில் காலடி எடுத்து வைத்த நிலையில் முதலாவதாக அமைக்கப்பட்ட பாடசாலை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி. அப்பாடசாலையில் முதலாவது அதிபராகவும் குருவாகவும் டானியல் பூர் விளங்கினார்.

குறித்த கல்லூரியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளை அமெரிக்க மிஷனரிமாரினால் ஆரம்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.

அமெரிக்க மிஷனரியைத் தொடர்ந்து அவர்களினால் பராமரிக்கப்பட்டு வந்த பாடசாலைகளை இலங்கையைச் சேர்ந்த சுதேசிகள் நிர்வகித்து வந்தனர்.

1960-ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசானது மிஷனரிப் பள்ளிக்கூடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இவ்வாறான ஒரு நடவடிக்கையின் கீழ் 1961-1962 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.

பொறுப்பேற்கப்பட்ட காலத்தை தொடர்ந்து யூனியன் கல்லூரி எவ்வித இடையூறும் இன்றி வரலாற்றுப் பாரம்பரியங்களை சுமந்துகொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் பயணித்தாள்.  1987 காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இடப்பெயர்வின் பின் சில காலம் மருதனார்மடம் பகுதியில் இயங்கிய பாடசாலை மீண்டும் 2012-இல் அதே இடத்திற்கு திரும்பியது.

நாட்கள் கடந்தோடின. மாதங்கள் உருண்டோடின ஆண்டுகள் விடைபெற்றுச் சென்றன.

இவ்வாறான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குறித்த கல்லூரிக்கும் அதன் வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த குரு மனையாகவும் அதிபர் மனையாகவும் இருந்த இடத்தை தென்னிந்திய திருச்சபையின் சிலோன் அமைப்பினர் உரிமை கோர தொடங்கியபோதே பிரச்சினைகள் எழுந்தன. பிரச்சினைகள் நாளுக்கு நாள் முற்றி கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி பூதாகரமாகி எல்லோருடைய கவனத்தையும் கல்லூரி நோக்கி ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் யாழ். பேராயர் டானியல் தியாகராஜா ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதனூடாக வழி வந்த செய்திகளை பார்த்து கவலை அடைந்தேன். தென்னிந்திய திருச்சபையின் பேராயராக நான் இருக்கின்ற நிலையில் எம்மில் பிரிந்த சிலர் தமக்கான ஒரு சபையை ஆரம்பித்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தென்னிந்திய திருச்சபையுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் அவர்கள் தொடர்பில் வடக்கு கல்விச் செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் எம்முடன் பேசி சுமுகமான முடிவை எடுக்க முயற்சிக்கவில்லை என்றார்

அதுமட்டுமல்லாது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றுவரும் பிரச்சினைக்குரிய இடமான அமெரிக மிசன் குருமார்கள் தங்கிய வீட்டின் அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளது.

1816-ஆம் ஆண்டு யாழ். வந்த குருமார்கள் தங்கிய  யூனியன் கல்லூரியில் காணப்படுகின்ற புராதன கட்டடத்தை மீள திருச்சபை அரசிடமிருந்து பொறுப்பேற்றது.

அதனை எம்மில் பிரிந்து சென்ற சிலர் அடாத்தாக தம் வசம் இழுப்பதற்கு முயல்கின்றனர். மிஷனரிமாரின் பின்னர் எமது சுதேசிகள் அமெரிக்கன் மிஷன்  பாடசாலைகளை மேற்பார்வை செய்து வழி நடத்தி வந்தனர்.

அரசாங்கத்திடம் யூனியன் கல்லூரியை ஒப்படைத்து பின் போராயரான சபாபதி குலேந்திரன் அதற்கு மாற்றான காணி ஒன்றை வழங்கி இல்லத்தை எமக்கு தர வேண்டும் என அரசாங்கத்துடன் கோரிக்கை வைத்து பெற்றுக் கொண்டார். கல்லூரியில் அமைந்துள்ள பழைய குருமார்கள் தங்கிய இல்லம் பின்னர் அதிபர்கள்  பயன்படுத்திய இடங்களை குறித்த பாடசாலை பாவனைக்காக வழங்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவற்றை அவர்களுக்கு வழங்க  வேண்டும் அல்லது அவர்களுக்குத்தான் உரியது என வாதிடுவது தவறாகும். ஏனெனில் அது எமது பாரம்பரிய சொத்து. அதனை யாருக்கும் நாம் வழங்கிவிட முடியாது எனத் தெரிவித்திருந்தார்

.

தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் ஊடக சந்திப்புக்கு முதல் நாள் தென்னிந்திய திருச்சபையின் சிலோன் அமைப்பினர் ஊடக சந்திப்பை நடத்தி இருந்தார்கள்.  தற்போது சர்ச்சைக்குள்ளான கட்டடம் தமக்குரியது.அதன் ஆவணங்கள் தற்போது எம்மிடம் இல்லை ஆவணத்தை விரைவில் எடுத்துவிடுவோம் என அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆவணம் என்று பார்க்கும்போது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 1962-10-26 ஆம் திகதி வெளியான வர்த்தமானியின் பிரகாரமும் நில அளவை திணைக்களத்தின் வரைபட இலக்கம் 892 இன் பிரகாரமும் இந்தக் கட்டடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டுக்கு பின்னர் கூட குறித்த பாடசாலையின் ஆரம்ப மிஷனரிமார் மற்றும் பாதிரிமாரின் வரலாறுகளை குறித்த பாடசாலைக்கு வந்த அதிபர்கள் பாதுகாத்தார்கள். அதனை மாற்ற முயலவில்லை.

95வீதமான இந்துக்களைக் கொண்ட யூனியன் கல்லூரியில் 9 மேற்பட்ட மிஷனரிமாரின் உருவப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு 5 மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்களின் உருவப் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாது பாடசாலையின் அனேகமான கட்டடங்கள் கிறிஸ்தவ மற்றும் மிஷனரிகளின் பெயர்களை தாங்கிய கட்டடங்களாக காணப்படுகிறது.

யூனியன் கல்லூரியில் கடந்த 2016 கட்டிய கட்டடத்தில் யாழில் மத மாற்றச் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்த கிறிஸ்தவப் பாதிரியாரின் பெயரே சூட்டப்பட்டதாக அறியவருகிறது.

1658 இல் போர்த்துகீசரிடமிருந்து யாழ்ப்பாணப் பட்டினத்தை கைப்பற்றியபோது தெல்லிப்பளை தேவாலயம் அவர்களால் அழிக்கப்பட்டது. 1730 ஆம் ஆண்டில் டச்சு படையெடுப்பாளர்கள் தேவாலயத்தை மீண்டும் கட்டினர்.

1799 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது (அறிவியலின் சுதந்திரம் மற்றும் மத வழிபாட்டின் இலவச பயிற்சி) எதிர்ப்பாளர்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது.

இந்த நேரத்தில் புராட்டஸ்டன்ட் லண்டன் மிஷனரி சொசைட்டி 1805 ஆம் ஆண்டில் தெல்லிப்பளைக்கு அனுப்பியது.

அவர் ஏழு ஆண்டுகள் யூனியன் கல்லூரி டச்சு தேவாலயத்தில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் தங்கியிருந்து பைபிளைப் பிரசங்கித்தனர்.

இது இவ்வாறிருக்க யூனியன் கல்லூரியில் எழும் பிரச்சினைகளுக்கு உரியவர்கள் தமது ஆவணங்கள் மூலம் பதில் அளிக்க முன்வர வேண்டும்.

பிரச்சினைகள் எழும்போது அதனை சுமூகமாக கையாண்டு பழைமை மாறாது வரலாற்று எச்சங்களை அழிய விடாது பாதுகாக்கின்ற தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை  பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

No comments