அன்னை பூபதி நாள்!கைது செய்யப்படுவீர்கள்! மகளுக்கு அச்சுறுத்தல்!

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு

சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறான வரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம்.

உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments